சமீப காலமாகவே, மதமாற்றம் விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு எதிராக, பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மதமாற்றம் என்பது சட்டப்படி செல்லும். ஆனால், கட்டாய மதமாற்றம் மட்டுமே சட்ட விரோதமான செயலாக கருதப்படுகிறது.
இச்சூழலில், மிரட்டியும், அச்சுறுத்தியும், பரிசு கொடுத்தும், பணம் கொடுத்தும் ஏமாற்றி மேற்கொள்ளப்படும் மோசடியான மதமாற்றத்திற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை, மூத்த நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் சி.டி. ரவிகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையில், கட்டாய மதமாற்றம் ஒரு தீவிரமான விவகாரம் என்றும் அது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இதையடுத்து, மிரட்டியும், அச்சுறுத்தியும், பரிசு கொடுத்தும், பணம் கொடுத்தும் ஏமாற்றி மேற்கொள்ளப்படும் மோசடியான மதமாற்றம் குறித்த தகவல்களை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மேலும் தகவல்களை சேகரிக்க நேரம் கேட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா. அவரின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு ஒரு வார காலம் காலக்கெடு வழங்கியுள்ளது.
அப்போது, கட்டாய மதமாற்றம் தொடர்பான மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உரிமை இல்லை என வழக்கறிஞர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், "அவ்வளவு நுட்பமாக செல்ல வேண்டாம். தீர்வு காண நாங்கள் இங்கு வந்துள்ளோம். நாங்கள் ஒரு காரணத்திற்காக இங்கே இருக்கிறோம்.
விஷயங்களைச் சரிசெய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம். அறத்தின் நோக்கம் நல்லதாக இருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால், நோக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. இதை விரோதமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது மிகவும் தீவிரமான பிரச்சினை. குறிப்பாக, இது நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
ஒவ்வொருவரும் இந்தியாவில் இருக்கும் போது, இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும். கட்டாய மத மாற்றம் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். குடிமக்களின் மத சுதந்திரத்தை பாதிக்கலாம். இந்த மிக தீவிரமான சிக்கலைச் சமாளிக்க மத்திய அரசு தலையிட்டு நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஏமாற்றி, மயக்கி, மிரட்டல் விடுத்து மேற்கொள்ளப்படும் மதமாற்றம் நிறுத்தப்படாவிட்டால் மிகவும் ஆபத்தான சூழ்நிலை உருவாகும்" என தெரிவித்தது.