டெல்லி கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருந்த ஷ்ரத்தாவை காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டினார். இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் ஆப்தாப் மீது ஷ்ரத்தா வால்கர் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.


ஆனால் ஆப்தாப் குற்றமற்றவர் என்றும் இந்த வழக்கில் விசாரணைக்கும் கோரினார். இதனை தொடர்ந்து அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.






இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆப்தாப் பூனாவாலாவை மற்ற கைதிகளைப் போல பகலில் 8 மணி நேரம் திறந்து, இரவில் தனி அறையில் அடைக்க திகார் சிறை அதிகாரிகளுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி சுரேஷ் குமார் கைட் மற்றும் நீதிபதி கிரிஷ் கத்பாலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆப்தாப் பூனாவாலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


கடந்த ஆண்டு மே மாதம் முதல் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும், ஒரு நாளில் இரண்டு மணிநேரம் மட்டுமே (காலை மற்றும் மாலையில் தலா ஒரு மணி நேரம்) பாதுகாப்பு உடையில் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார் எனவும் அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், சிறைச்சாலையில் ஏதேனும் குற்றம் இழைக்கப்பட்டால், சிறை அதிகாரிகள் ஒருவரை தனிமைச் சிறையில் அடைக்க முடியும். ஆப்தாப் அத்தகைய குற்றத்தை செய்யவில்லை என்றும், அவருக்கும் மனிதர்களுக்கும் இடையேயான தொடர்பு கிட்டத்தட்ட பூஜ்ஜியமானது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆனால் சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆப்தாப் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தாக்கப்பட்டதால் ஆப்தாப் முழு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர். ஆப்தாப் மீதான அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, அவரது பாதுகாப்பிற்காக ஒரு டிஎஸ்பியும் அவருடன் 24 மணி நேரம் பணியில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனை தொடர்ந்து, நீதிமன்ற விசாரணையின்போது ஆப்தாபின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு விசாரணை நீதிமன்றம், சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. பகல் நேரங்களில் மற்ற கைதிகளைப் போல அவரையும் வெளியே அனுமதிக்கவும் இரவில் தனி சிறையில் அடைக்கவும் ஆப்தாப் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், சிறைத்துறை உதவி ஆணையர், சஞ்சய் லாவோ, பகல் நேரத்திலும் கூட, ஆப்தாப்  மீது தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் உள்ளது என தெரிவித்தார்.  இருப்பினும், ஆப்தாபின் கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், மற்ற கைதிகளைப்போல பொருந்தக்கூடிய விதிகளின்படி பகலில் 8 மணிநேரம் ஆப்தாபை வெளியே செல்லவும், இரவில் தனி அறையில் அடைக்கவும் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.