மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கு ஏற்பட்ட காயங்கள் தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். 



மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் அடிக்கடி ஏதேனும் விபத்தில் சிக்கி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் கூட காரில் பயணப்பட்ட மமதா திடீரென ஓட்டுநர் பிரேக் அடித்ததால் நிலை தடுமாறி இடித்துக் கொண்டார். இதில் அவருக்கு முன் நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது.


இப்படியான நிலையில் நேற்று பாலிகங்கேயில் நடைபெற்ற சுப்ரதா முகர்ஜியின் சிலை திறப்பு விழாவில் மமதா பானர்ஜி பங்கேற்றார். அதன்பின் அவர் வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து மாலை நேரத்தில் திடீரென மமதா நெற்றியில் காயத்துடன் ரத்தம் வழிந்தவாறு மருத்துவனைக்கு அழைத்து வரப்பட்டார். அவரின் புகைப்படங்கள் வெளியாகி திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களையும், அரசியல் வட்டாரத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


மமதா பானர்ஜி வீட்டில் நடைபயிற்சி மேற்கொண்ட போது கீழே விழுந்து நெற்றியில் காயம் ஏற்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்தே அவர் அருகில் இருக்கும் எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் வீடு திரும்பினார். 






இந்நிலையில் முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர் மொனிமோய் சாடர்ஜி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ முதலமைச்சர் மமதா பானர்ஜி காயத்துடன் இரவு 7.30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீட்டில் நடைபயிற்சி மேற்கொண்ட போது பின்னால் இருந்து வந்த அழுத்தம் காரணமாக கீழே விழுந்ததாக முதலமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு நெற்றியில் மூன்று தையல்கள் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்ட போதும் அவர் வீடு செல்ல விருப்பம் தெரிவித்தார். தொடர்ந்து அவர் மருத்துவர்கள் மேற்பார்வையில் வீட்டில் இருந்தப்படி சிகிச்சை பெறுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.