மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா சின்னத்தை, மெரினா கடற்கரையில் அமைப்பதற்கான அடுத்தகட்ட பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


கடலில் பேனா சின்னம்:


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணியை போற்றும் வகையில், அவரின் நினைவிடத்திற்கு அருகே, கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. பேனாவை, ரூபாய் 81 கோடி செலவில், 42 மீட்டர் உயரத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 


இத்திட்டத்திற்கு, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


அனுமதி:


சமீபத்தில் பேனா சின்னம் அமைப்பதற்கு, தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம், அனுமதி அளித்த நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 


விண்ணப்பத்தை பரிசீலனை செய்த மத்திய அரசு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 




அறிக்கை தாக்கல்:


இது தொடர்பாக, தமிழ்நாடு பொதுப்பணித் துறைக்கு மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, பேனா அமைப்பதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம், இடர்பாடுகள் மதிப்பீட்டு அறிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை திட்டம் ஆகியவற்றை தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து கேட்பு கூட்டம்:


மேலும் மீனவர்கள் உட்பட பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நினைவுச் சின்னத்தை பார்வையிடக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு, உரிய பாதுகாப்பு வசதிகள் குறித்தும், சுனாமி உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா என்பதும் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இச்சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையை 4 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் முன்னாள் மறைந்த முதலமைச்சரின் பேனா சின்னத்தை அமைப்பதற்கான, அடுத்தகட்ட பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


Also Read: Chief Minister Stalin speech: திராவிட மாடல் ஆட்சியோ திமுகவோ ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல; முதல்வர் ஸ்டாலின் பேச்சு