வேலை தருவதாக அழைத்து சென்று மியான்மர் நாட்டின் மியாவாடி பகுதியில் சர்வதேச கும்பலிடம் மாட்டி கொண்ட 13 இந்தியர்கள் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 


 






அனைவரும் தமிழ்நாடு சென்றடைந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார். கடந்த மாதம், மியான்மர் மற்றும் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகங்களின் கூட்டு முயற்சிகளைத் தொடர்ந்து மியாவாடியில் இருந்து 32 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.


இதுகுறித்து அரிந்தம் பக்சி தனது ட்விட்டர் பக்கத்தில், "மியான்மரில் சர்வதேச கும்பலிடம் இந்தியர்கள் சிக்கிய வழக்கை நாங்கள் தீவிரமாக விசாரித்து வருகிறோம். மியான்மரில் உள்ள இந்திய தூதரகம், தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் 32 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதற்கு நன்றி.


மேலும் 13 இந்திய குடிமக்கள் தற்போது மீட்கப்பட்டு, இன்று தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர்" என பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் விவரிச்ச பக்சி, "சில இந்திய குடிமக்கள் தங்கள் போலி முதலாளிகளிடமிருந்து மீட்கப்பட்டு, அந்த நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக மியான்மர் அதிகாரிகளின் காவலில் உள்ளனர். அவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இந்த வேலை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முகவர்களின் விவரங்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. லாவோஸ் மற்றும் கம்போடியாவிலும் இதுபோன்ற வேலை மோசடி சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. 


வியன்டியான், புனோம் பென் மற்றும் பாங்காக்கில் உள்ள எங்கள் தூதரகங்கள் அங்கிருந்து மக்களை திருப்பி அனுப்ப உதவுகின்றன" என்றார். ஜூலை 5 அன்று, வேலைகளை தருவதாக அழைத்து சென்ற போலி கும்பலுக்கு எதிராக இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 


மியான்மர் இந்தியாவின் வியூக ரீதியான அண்டை நாடாக விளங்குகிறது. மேலும், இது தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாகாலாந்து மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுடன் 1,640 கிமீ நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.


தாய்லாந்தின் தென்கிழக்கு மியான்மரின் கயின் மாநிலத்தில் உள்ள மியாவாடி பகுதி மியான்மர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் முழுமையாக இல்லை. சில இன ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் அப்பகுதி உள்ளது.