டெல்லியில் 15 ஆண்டுகால பாஜக ஆதிக்கத்தை உடைத்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக் கொடியை ஏற்றியிருக்கிறது மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி . 134 இடங்களில் வெற்றி பெற்று டெல்லி உள்ளாட்சியை கைப்பற்றி ஆம் ஆத்மி சாதனை படைத்துள்ளது.
இதில், ஒரு முக்கிய வேட்பாளருக்கு வாய்ப்பு அளித்து அவர் வெற்றி பெற்றிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. அவர்தான், டெல்லியின் முதல் திருநங்கை கவுன்சிலர் பாபி.
சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு, வடமேற்கு டெல்லியின் தெருக்களில் பணத்திற்காக திருமண விழாவில் நடனமாடி, பாட தொடங்கிய பாபி, பல்வேறு விதமான பாகபாட்டையும் அவமானத்தையும் கடந்து வந்துள்ளார்.
ஆனால், 23 ஆண்டுகளுக்கு பிறகு, டெல்லி உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவித்தபோது, அதே தெருவில் வெற்றி பேரணியை மேற்கொண்டு அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
சிறு வயதிலிருந்தே பல்வேறு பாகுபாடுகளை எதிர்கொண்ட பாபி, டெல்லியில் ஒரு ஏழை தலித் குடும்பத்தில் பிறந்தவர். 12 வயதில் தந்தையை இழந்தார். பாபியையும் அவரது தம்பியையும் வளர்ப்பதற்காக அவரது தாய் மோசமான வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. விரைவிலேயே, பாலினம் மாறியதை உணர தொடங்கினார் பாபி.
தனது சிறு வயது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பாபி, "எனக்கு சுமார் 14 வயதாக இருக்கும் போது, ‘நான் யார் என்ன?’ என என்னை நானே கேட்க ஆரம்பித்தேன். ஏனென்றால், சுற்றியுள்ள பல மாணவர்களும் என்னைச் சுற்றியுள்ளவர்களும் என்னை மோசமான வார்த்தைகளை சொல்லி அழைத்தார்கள்.
நான் சாதாரண குழந்தைகளைப் போல இல்லை என உணர்ந்தேன். அவர்கள் என்னை துன்பப்படுத்துவார்கள். எனக்கு வருத்தமாக இருந்தது.
என்னால் என்ன செய்ய முடியும்? இறுதியில் பள்ளியை விட்டு வெளியேறினேன். தம்பியின் வாழ்க்கை கெட்டுவிடும் என சொல்லி எனது குடும்பமே வீட்டை விட்டு வெளியேறச் சொன்னார்கள். அதன் பிறகு, நிலைமை மோசமானது" என்றார்.
நல்வாய்ப்பாக, பபிதா என்ற சக திருநங்கை, அவரை அழைத்து சென்று வளர்க்க தொடங்கினார். பபிதா குறித்து குறிப்பிட்ட அவர், "அவர் என்னை அழைத்துச் சென்று தாய் தந்தையை போன்று அன்பாக வளர்த்தார்" என்றார்.
பாபி, தனது 24வது வயதில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து சமூகப் பணி செய்ய தொடங்கினார். அந்த சமயத்தில், ஊழலுக்கு எதிரான இந்தியா (ஐஏசி) இயக்கம் டெல்லியில் வேகம் பெற்று கொண்டிருந்தது. இந்த இயக்கத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி உருவானபோது, அக்கட்சியிலும் பாபி சேர்ந்தார்.
இருப்பினும், 2017 தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இருந்தபோதிலும், சுல்தான்புரி ஏ வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டபோது தோல்வியை சந்தித்தார்.