பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு, யுஜிசி அறிவுறுத்தலின்படி உயர் கல்வி நிறுவனங்கள் இந்திய மொழி திருவிழாவை நடத்தி வருகின்றன. 


’’நாட்டின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக ’ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ கொண்டாடப்படுகிறது. இதில் ’ஒரே பாரதம், உன்னத பாரதம்’ முன்னெடுப்பின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. 


பாரதியார் பிறந்தநாள்


இந்த நிலையில் சுதந்திரப் போராட்ட வீரரும் பல மொழி வித்தகருமான மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் டிசம்பர் 11-ம் தேதி தேசிய மொழிகள் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (டிசம்பர் 11) தேசிய மொழிகள் தினம் கொண்டாடப்படுகிறது. 


இன்றைய நாள் முழுவதும் பல்வேறு வகையான சுவாரசியமான, கேளிக்கை நிறைந்த, கவரக் கூடிய நிகழ்ச்சிகளை கல்வி நிறுவனங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் பி.கே.தாகூர், அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் இயக்குநர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.




நிகழ்ச்சிகள்


உதாரணத்துக்கு,  இந்திய மொழிகள் / பிராந்தியங்கள் குறித்த கண்காட்சி, மண்டல மொழிகளின் சிறப்பை விளக்கும் மையங்கள் அமைத்தல், கலாச்சார நிகழ்ச்சிகள், கலாச்சார உடைகளை அணிதல், குறிப்பிட்ட பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்ட கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்த வேண்டும். 


அதேபோல விநாடி-வினா, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, இசைப் போட்டிகள், ’என் மொழி என் கையெழுத்து’ பிரச்சாரம், மாணவர்கள் பல மொழிகளில் கற்றல், வாசித்தல் மற்றும் எழுதுவதற்கான வழிகாட்டியை வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அடுத்த நாள் நடத்தப்பட்ட நிகழ்ச்சி விவரங்களை யுஏஎம்பி (University Activity Monitoring Portal - UAMP) இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.


இந்த நிகழ்ச்சிகளில் சுமார் 1 லட்சம் உயர் கல்வி நிலையங்கள், கல்லூரிகள் அல்லது பள்ளிகள் கலந்துகொள்ளுமாறு ஆசிரியர்களும் மாணவர்களும் உற்சாகப்படுத்த வேண்டும். இதன்மூலம் குறைந்தபட்சம் 1 கோடி மாணவர்கள் கலந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று யுஜிசி தெரிவித்து இருந்தது. அந்த வகையில் உயர் கல்வி நிறுவனங்களில் மொழி தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. 


சிறப்பு அதிகாரி


மாணவர்களிடையே மொழி நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும் நாட்டின் வளமான கலாசார ஒற்றுமையை வளர்க்கும் வகையிலும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் போட்டிகளை நடத்த அனைத்து நிறுவனங்களும் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் யுஜிசி அறிவுறுத்தி இருந்தது. உயர் கல்வி நிறுவனங்கள் ம்போட்டிகளை நடத்தி மாணவர்களுக்கு சான்றிதழ்கள்/ பரிசுகள் மற்றும் கல்விசார் பலன்களையும் வழங்கலாம் என்றும் யுஜிசி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.