தலைநகர் டெல்லிக்கு மேற்கே 8 கி.மீ. தொலைவில் நேற்று இரவு 9.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவான  நிலநடுக்கத்தின் ஆழம்,  தரையில் இருந்து 5 கிமீ தூரத்தில்  இருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இதனால் கட்டடங்கள் லேசாக அதிர்ந்ததால், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தவர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். முன்னதாக டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இந்த மாதம் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிருஷ்டவசமாக, இந்த நிலநடுக்கங்களால் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.






 


இதனிடையே, சமீபத்தில் நேபாளம் மற்றும் இந்தோனேசியாவில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான உயிர்கள் பலி மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தியது. நவம்பர் 9 அன்று, உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் மேற்கு நேபாளத்தில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் ஆறு பேர் இறந்தனர் மற்றும் பல வீடுகள் இடிந்து விழுந்தன.


இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் நவம்பர் 21ஆம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவையே உலுக்கிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாக,  நிலநடுக்கத்தால் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகள் என ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.  இடிபாடுகளில் சிக்கி 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.