எதிர்க்கட்சி ஆளும் பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. தங்களின் அரசுகளை அமைக்க முயற்சி செய்து வருவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார்போல, மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டது.
பா.ஜ.க.வின் துணையோடு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தன்னுடைய கட்சியை இரண்டாக உடைத்து முதலமைச்சரானார். சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு 100 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, தெலங்கானாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி மாற 100 கோடி ரூபாய் அளவுக்கு பணம் அளிக்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை வெளியிட்ட பகீர் தகவல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வில் இணைக்க பணம் கொடுத்த மூன்று பேரை பிடித்திருப்பதாக தெலங்கானா காவல்துறை தெரிவித்திருந்தது. பணம் கொடுக்க முயற்சித்தவர்களுக்கும் பா.ஜ.க.வுக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறை கூறியிருந்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து பா.ஜ.க.வை டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா இன்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ.க்களை வாங்க பாஜக முயற்சி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தொடர்பு இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டால், அவர் கைது செய்யப்பட வேண்டும் என மணீஷ் சிசோடியா வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக டெல்லி, பஞ்சாப் மற்றும் எட்டு மாநிலங்களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை வாங்க பா.ஜ.க. முயற்சி மேற்கொண்தாக மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியிருந்தார். தெலுங்கானாவில் இந்த முறை பா.ஜ.க. ஆடிய மோசமான விளையாட்டு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெலங்கானாவில் மூன்று எம்எல்ஏக்களை, பாஜகவிற்கு கட்சி மாற வைப்பதற்காக மூன்று பேர் பணம் கொடுக்க முயற்சித்தபோது பதிவு செய்யப்பட்ட ஆடியோ கிளிப் ஒன்றில் 'ஷா ஜி' என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதுகுறித்து பேசிய மணீஷ் சிசோடியா, "'ஷா ஜி' உண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்றால், அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.
ஏனெனில், எம்.எல்.ஏ-வை விலைக்கு வாங்கும் தரகர் பிடிபட்டால், அதில் நாட்டின் உள்துறை அமைச்சரின் பெயர் இடம்பெற்றால், அது ஒட்டுமொத்த நாட்டிற்கும் மிகவும் ஆபத்து" என்றார்.