தற்போதைய சூழலில், இலவசங்கள் பெரும் விவாதத்தை கிளப்பி வருகிறது. இலவசங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக ஒரு சாரர் குற்றம்சாட்டி வருகிறது.


குறிப்பாக, இலவசங்களில் இருந்து நாட்டை விடுவிக்க மக்கள் முடிவு செய்துவிட்டதாக பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். ஆனால், பல்வேறு மாநிலங்களில் இலவச திட்டங்களை பா.ஜ.க.வே வழங்கி வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


அதற்கு ஏற்றார் போல, உத்தரபிரதேசத்தில் சுவாமி விவேகானந்தர் யுவ சக்திகரன் யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு கோடி டேப்லெட்டுகள் அல்லது ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. 


பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே. பி. நட்டா, “மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச ஸ்கூட்டி வழங்கப்படும்” என்றும் அறிவித்திருந்தார்.


 






இலவசங்கள் அனைத்தும் சமூக நல திட்டங்களே என்றும் அதை வழங்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்ட பிரிவினர் கூறுகின்றனர்.  இதற்கு மத்தியில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி தேவை குறித்து வாக்காளர்களுக்கு உண்மையான தகவல்களை வழங்குமாறு அரசியல் கட்சிகளைக் கேட்டு கொள்வதற்கான அதிகாரத்தை வழங்கும் வகையில் தேர்தல் விதிகளை திருத்துவதற்கு அக்டோபர் 4ம் தேதி தேர்தல் ஆணையம் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருந்தது.


இந்நிலையில், இலவசங்கள் உள்ளிட்ட விவகாரங்களை ஒழுங்கப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என காங்கிரஸ் கட்சி நேற்று விமர்சித்துள்ளது. இத்தகைய விவகாரங்கள் ஒரு துடிப்பான ஜனநாயக அமைப்பின் இயங்கியலின் ஒரு பகுதியாகும். இவை வாக்காளர்களின் ஞானம், பகுத்தறிவு மற்றும் பகுப்பாய்வைச் சார்ந்தே உள்ளது என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், "தேர்தலுக்கு முந்தையதாக அறிவிக்கப்படும் வாக்குறுதியாக இருந்தாலும் சரி, தேர்தலுக்குப் பிந்தையதாக அறிவிக்கப்படும் வாக்குறுதியாக இருந்தாலும் சரி, அதை ஏற்று கொள்ள வேண்டுமா அல்லது அதற்கு தண்டனை வழங்க வேண்டுமா அல்லது வெகுமதி வழங்க வேண்டுமா என்பதை மக்களே முடிவு செய்கிறார்கள். 


இது போன்ற வாக்குறுதிகள் விதிமீறலா என்பதையும் மக்களே முடிவு செய்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளை நியாயப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் தேர்தல் ஆணையத்திற்கோ, அரசுக்கோ, உண்மையில் நீதிமன்றங்களுக்கோ கூட அதிகார வரம்பு கிடையாது. எனவே, ஆணையம் அவ்வாறு செய்வதைத் தவிர்ப்பது நல்லது" எனக் குறிப்பிட்டுள்ளார்.