டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு இன்று திடீரென குற்றப்பிரிவு போலீசார் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமலாக்கத்துறை சம்மனுக்கு கெஜ்ரிவால் ஆஜராகாமல் இருக்கும் நிலையில் தற்போது குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் விடுத்து உள்ளனர்.





கடந்த வாரம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது தனது கட்சி எம் எல் ஏக்கள் 7 பேரிடம் பாஜக பேரம் பேசியதாகவும் 25 கோடி வரை தர தயாராக இருப்பதாகவும் பாஜக கூறியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க சதி நடப்பதாக குற்றம் சாட்டினார்.


இந்நிலையில் இன்று காலை டெல்லி குற்றப்பிரிவு அதிகாரிகள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்று நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


டெல்லி மதுபான ஊழல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியும் இதுவரை, அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. டெல்லியில் நிர்வாகப் பணிகள் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையை மேற்கோள் காட்டி நவம்பர் 2 ஆம் தேதி முதல் சம்மனைத் தவிர்த்தார். தொடர்ந்து டிசம்பர் 3ம் தேதி அமலாக்கத்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், தான் ராஜ்யசபா தேர்தல் தொடர்பான பணிகளில் இருப்பதாகவும், கேள்வித்தாளை அனுப்பினால் அதற்கு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.


இதைதொடர்ந்து டிசம்பர் 21ம் தேதியன்று இரண்டாவது சம்மன் வந்தபோது,  கெஜ்ரிவால் தனது முந்தைய கடிதங்களுக்கு ஏஜென்சி பதிலளிக்கவில்லை என்று கூறினார். தொடர்ந்து மூன்றாவது சம்மன் வந்தபோது விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால்,  டெல்லியின் முதலமைச்சராக இருப்பதால் குடியரசு தினத்திற்கான பல நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளுக்கான திட்டமிடல் மற்றும் தயாரிப்பு தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளேன் என விளக்கமளித்தார். இவ்வாறு அடுத்தடுத்த 5 சம்மன்களையும் ஏற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை.


இந்நிலையில் இன்று காலை டெல்லி குற்றப்பிரிவு அதிகாரிகள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்று நோட்டீஸ் கொடுத்துள்ளனர். பரபரப்பான அரசியல் சூழலில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.