இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள எட்டு மாநிலங்களில் தலைநகரான டெல்லியும் ஒன்றாகும். மகாராஷ்ட்ராவில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, டெல்லியிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் கடந்த 74 நாட்களுக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் கீழ் நேற்றுதான் குறைந்தது. நேற்று டெல்லி முழுவதும் கொரோனா பாதிப்பு வீதம் 0.99 சதவீதமாக பதிவாகியது.
அதற்கு முந்தைய தினமான ஞாயிற்றுக்கிழமை 1.25 சதவீதமாக கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியது. உலக சுகாதார அமைப்பான கொரோனா தினசரி பாதிப்பு வீதம் 5 சதவீதத்திற்கும் கீழ் இரு வாரங்கள் தொடர்ந்து காணப்பட்டால் நிலைமை கட்டுக்குள் வந்ததாக கருதலாம் என்று அறிவித்துள்ளது. டெல்லயில் கடந்த 11 நாட்களாக கொரோனா பாதிப்பு வீதம் 5 சதவீதத்திற்கும் கீழ் குறைவாக பதிவாகி வருகிறது.
டெல்லியில் கடந்தாண்டு டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரையில் 124 நாட்கள் தொடர்ச்சியாக 5 சதவீதத்திற்கும் கீழ் கொரோனா வைரசின் தினசரி பாதிப்பு பதிவாகி வந்தது. குறிப்பாக 82 நாட்கள் தொடர்ச்சியாக ஒரு சதவீதத்திற்கும் கீழ் கொரோனா தினசரி பாதிப்பு பதிவாகியது.
இது மட்டுமின்றி, டெல்லியில் கொரோனாவால் நேற்று மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 86 ஆக குறைந்துள்ளது. டெல்லியில், கடந்த இரு தினங்களாக கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை 100க்கும் கீழ் பதிவாகி வருகிறது. டெல்லியில் கடந்த மே மாதத்தில் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறிப்பாக, மே 3-ந் தேதி டெல்லியில் அதிகபட்ச உயிரிழப்பாக 448 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
இதுமட்டுமின்றி, டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த 53 நாட்களுக்கு பிறகு நேற்று 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. டெல்லியில் 17 சதவீத படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 40 சதவீத ஐ.சி.யு. படுக்கைகளில் மட்டுமே கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த மாநில அரசின் செயலியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியபோது, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஐ.சி.யு. படுக்கைகள், சாதாரண வார்டு படுக்கைகளை போதிய அளவு மத்திய அரசு ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட, உயிரிழப்புகளை சந்தித்ததில் டெல்லி முக்கிய இடம் பிடித்துள்ளது.
மேலும் படிக்க : பிஸியான பிரதமரே! மன் கி பாத் பிரதமரே..! - பிரதமருக்கு சவால் விடுத்த மம்தா பானர்ஜி