வன்முறை, வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் முகமது ஜூபைருக்கு டெல்லி பாட்டியாலா ஜாமீன் வழங்கியுள்ளது. 


பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகள்  நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். இந்த கருத்தை டெல்லி பாஜக நிர்வாகி நவீன் ஜிந்தால் நியாயப்படுத்த இருவரையும் பதவி நீக்கம் செய்து பாஜக தலைமை நடவடிக்கை எடுத்தது. விஸ்வரூபம் எடுத்த இவ்விவகாரத்தில் அரபு நாடுகள் மத்திய அரசை கடுமையாக கண்டித்தது. நுபுர் சர்மாவின் கருத்து உலக நாடுகள் கவனத்திற்கு செல்ல பத்திரிகையாளர் முகமது ஜூபைர் தான் காரணம் என சொல்லப்பட்டது. 






செய்திகளின் உண்மைத் தன்மை கண்டறியும் ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனராக பதவி வகிக்கும் முகமது ஜூபைர்  தொடர்ந்து மதக்கலவரங்களை தூண்டும் விதத்தில் பகிரப்படும் பொய்யான தகவல்களை கண்டறிந்து அதன் உண்மை தன்மையை பதிவிட்டு வந்தார். அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வலதுசாரி அமைப்புகளால் பதிவிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்தை போலியானது என உறுதி செய்து அது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டார். 


இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கடந்த ஜூன் 27 ஆம் தேதி ஜூபைர் அகமதாபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது கைது சம்பவத்துக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்திய பத்திரிகை அமைப்புகள் மட்டுமின்றி பன்னாட்டு பத்திரிக்கை அமைப்பும் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தது. இந்நிலையில் சுமார் 17 நாட்களுக்குப் பிறகு வன்முறை,  வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் முகமது ஜூபைருக்கு டெல்லி பாட்டியாலா ஜாமீன் வழங்கியுள்ளது. அவர் நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண