குளிர் காலம் அதன் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் டெல்லியிலும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிகாலைப்பொழுதில் சாலைகளை மறைக்கும் அளவுக்கு பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், டெல்லிவாசிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.


இன்று (ஜனவரி 6 ஆம் தேதி) காலை 1.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகி குளிர் வாட்டி வதைத்து வருகிறது. அதிகாலை வேலைக்குச் செல்வோருக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.


வழக்கமாக ஆண்டுதோறும் இத்தகைய காலக்கட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் நிலையில் இந்த ஆண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தென்மேற்கு டெல்லியின் எல்லையோரத்தில் அமைந்துள்ள அயா நகரில் இன்று காலை 1.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. சஃப்தர்ஜங்கில் 4.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தேசிய தலைநகரில் நிலவும் குளிர் அலையில் இருந்து விடுபடுவதற்காக டெல்லி மக்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர்.


டெல்லியில் அதிகரித்து வரும் குளிர் அலை காரணமாக, வீடற்ற மக்களுக்காக தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள வீடற்ற மக்கள், தேசிய தலைநகர் பகுதியில் நிலவும் குளிர் அலையில் இருந்து தப்பிக்க தங்குமிடங்களுக்கு சென்றனர். இந்த குறைந்த வெப்பநிலை, டெல்லியையே நடுங்க வைத்துள்ளது.


டெல்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் விபின் ராய், இதுகுறித்து கூறுகையில், "எங்களிடம் 197 நிரந்தர தங்குமிடங்கள் உள்ளன. குளிர்காலத்தில் டெல்லியில் கிட்டத்தட்ட 250 கூடாரங்கள் போட்டோம். இப்போது, ​​செயல்பாட்டில் எங்களிடம் 190 கூடாரங்கள் உள்ளன.


கூடுதலாக 50 கூடாரங்களை வைத்திருக்கிறோம். மெத்தைகள் மற்றும் போர்வைகள் தவிர குடியிருப்போருக்கு ஒரு நாளைக்கு 3 வேளை உணவும் வழங்குகிறோம்" என்றார்.


சனிக்கிழமை வரை, இந்த குளிர் அலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை மையம் அறிவித்தபோதிலும், இதே நிலை ஜனவரி 11 வரை தொடரலாம்.


கடந்த 48 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.


ஜனவரி 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி கல்வி இயக்குனரகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. 9 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






டெல்லி உள்ளிட்ட கங்கை சமவெளிப் பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்ததால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நள்ளிரவு தொடங்கி டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் 20 ரயில்கள் தாமதாகமாக இயக்கப்படுவதாக அப்பகுதி ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.