புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லி  மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,  சிபிஐ அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். 


முன்னதாக இந்த வழக்கில் ஆஜராக கூறி இரு தினங்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இன்றைய தினம் அவர் ஆஜராவதற்கு முன்பு ராஜ்காட்டில் உள்ள  மகாத்மா காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்படுவதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். 


முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சில தேச விரோத சக்திகள் இந்தியா வளர்ச்சியடைவதை விரும்பவில்லை. நாடு தொடர்ந்து முன்னேறும் என்பதை இந்த சக்திகளுக்கு நான் சொல்ல விரும்புகிறேன் என கூறினார். மேலும் மதுபான கொள்கை தொடர்பாக எங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில், விசாரணை அமைப்புகள் பொய் கூறுகிறது. பாஜக உத்தரவுப்படி சிபிஐ செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். 


நான் ஊழல்வாதி என்று நீங்கள் (பாஜக) சொல்கிறீர்கள். நான் வருமான வரித்துறையில் கமிஷனராக இருந்த போது வேண்டுமானால் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கலாம். அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் செய்தார் என்று சொன்னால் இந்த உலகில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை என்பது போன்றது எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ அலுவலகம் செல்வதற்கு முன்பு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அவரது இல்லத்திற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


புதிய மதுபான கொள்கை வழக்கு 


டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இதனிடையே கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் மாநில அரசு  புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. 


இதற்கு பல தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில்,  2021ஆம் ஆண்டு ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது. ஆனால் மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்கு பதிவு செய்தது. 


பின்னர் கடந்தாண்டு ஆகஸ்டில்  மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள்  சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ அதிகாரிகள்  மணிஷ் சிசோடியாவை  கைது செய்தனர். அவர் தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.