இந்தி மொழித் திரைப்படமான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்துக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் இந்தப் படத்துக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.
பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் ஜம்மு காஷ்மீரில் இருந்து காஷ்மீர் இந்துக்கள் வெளியேறியதன் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் டெல்லியில் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் பதில் அளித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ”இந்த படத்திற்கு டெல்லியில் வரிவிலக்கு கோரி இருக்கிறார்கள் பாஜகவினர். ஏன் அப்படி கேட்கிறீர்கள்? நீங்கள் படத்தை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறீர்கள் எனில் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரியிடம் படத்தை யூடியூப்பில் வெளியிடுமாறு கேட்டிருக்க வேண்டும். அங்கு வெளியிடுவதற்கு எந்த வரியும் கிடையாது. ஒரே நாளில் அனைவராலும் பார்க்க முடியும். அப்போது அரசிடம் வரிவிலக்கு கோர வேண்டிய அவசியம் இருக்காது. காஷ்மீர் பண்டிட்கள் பெயரில் சிலர் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டனர். நீங்கள் போஸ்டர் ஒட்டும் வேலையை பார்த்து வருகிறீர்கள்” என்று பதில் அளித்திருக்கிறார்.
வீடியோவைக் காண:
அனுபம் கேர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரபொர்தி, பல்லவி ஜோஷி முதலானோர் நடித்துள்ள `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஷர்மா தானும் தனது அமைச்சரவையும் இந்தத் திரைப்படத்தைக் காணப் போவதாக அறிவித்தார். திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் தனது மாநில அரசு பொழுதுபோக்கு வரியில் இருந்து இந்தப் படத்திற்கு விலக்கு அளிப்பதாக அறிவித்தார். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் காவல்துறையினருக்கு இந்தத் திரைப்படம் பார்க்க விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்ததோடு, வரிவிலக்கும் அளித்து அறிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்