கொரோனா விதிமுறைகள் மீறல் தொடர்பாக கேரளாவில் இதுவரை ரூ.350 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.215 கோடி மாஸ்க் அணியாதவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டதாகும்.
கடந்த 2019 டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அதன்பின்னர் இப்போது உலகம் முழுவதும் கொரோனா 4வது அலை வரை ஏற்பட்டுவிட்டது.
இந்தியாவின் முதல் கொரோனா தொற்றாளர்..
கடந்த 2020 ஜனவரியில் சீனாவில் மருத்துவம் பயின்றுவந்த மாணவர்கள் சிலர் தாயகம் திரும்பினர். இதில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த 22 வயது மருத்துவ மாணவி ஒருவர் தனக்கு தொண்டையில் அரிப்பு இருப்பதாக கேரள சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுத்தார். உடனே அவரை ஆம்புலன்ஸ் வந்து அழைத்துச் சென்றது. ஒட்டுமொத்த தேசத்தின் கவனமும் திருச்சூர் பக்கம் திரும்பியது. திருச்சூர் அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டதட்ட ஒரு மாதம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அந்த மாணவி தான் இந்தியாவின் முதல் கொரோனா தொற்றாளர்.
அதன் பின்னர் இந்தியா மார்ச் 20, 2020ல் முதல்முறையாக தேசம் தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியது. கொரோனா போன்ற வைரஸ் நோய், ஊரடங்கு இதெல்லாம் இந்தியாவுக்கு மிகவும் புதிதாகவே இருந்தது.
இந்நிலையில் கொரோன கட்டுப்பாடு விதிகளை மத்திய அரசு அறிவித்தது. பொது இடங்களுக்கு முகக்கவசம் இல்லாமல் வரக்கூடாது. சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். கொரோனா பரிசோதனைக்கு கொடுத்திருந்தால் முடிவுகளை அறியும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா பாசிடிவ் என வந்தால் 14 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என பல வழிகாட்டுதல்களை மத்திய அரசு கொண்டுவந்தது.
இந்தச் சூழலில் தான் கேரளாவில் கொரோனா பரவல் கட்டுப்பாடற்று சென்றது. முதலில், கேரளாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்காக அம்மாநில சுகாதார அமைச்சர் ஷைலஜா டீச்சர் பாராட்டுக்கு உள்ளானார். ஆனால் திடீரென பரவல் கட்டுக்கு அடங்காமல் சென்றது. தேசத்திலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேராளவில் தான் கொரோனா அன்றாட பாதிப்பு அதிகமாக பதிவாகி வந்தது. கடந்த 3வது அலை வரை இதுதான் நிலைமையாக இருந்தது. இதுவரை 67,476 பேர் கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2020 ஆண்டு தொடங்கியே கேரளா கொரோனா விதிமுறை மீறல்களை தீவிரமாகக் கண்காணித்து வந்தது. விதிமுறை மீறலில் ஈடுபடுவோர் மீது அபராதங்களை செலுத்தியது. இதனால் கேரள காவல்துறை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. ஆனால் அதுபற்றிக் கூட கேரள அரசு கவலை கொள்ளவில்லை. தொடர்ந்து விதிமுறை மீறலுக்கான அபராதத்தை கடுமையாக்கியது. இதனாலேயே கேரளாவில் இதுவரை ரூ.350 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.215 கோடி மாஸ்க் அணியாதவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டதாகும்.