எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் சூட்டியதில் இருந்தே, பாஜக அதற்கு கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே நாட்டின் பெயரை பாரத் என பயன்படுத்த வேண்டும் என பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியா பெயர் மாற்ற விவகாரம்:
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும், இனி இந்தியா என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது, பாரத் என்றே நாட்டை அழைக்க வேண்டும் என கூறி இருந்தார். இந்த சூழலில்தான், வழக்கமாக குறிப்பிடுவதை போன்று அல்லாமல், ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் பாரத குடியரசு தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயரை “பாரதம்” என மாற்றுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.
நாட்டின் பெயர் மாற்றப்படுகிறதா?
ஜி20 உச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என அச்சிடப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாஜகவை விமர்சித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "எதிர்க்கட்சி கூட்டணி தன்னை 'பாரத்' என்று அழைக்க முடிவு செய்தால், ஆளும் கட்சி நாட்டின் பெயரை 'பாஜக' என்று மாற்றுமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர், "பெயர் மாற்றம் நடப்பதாக எனக்கு அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. பல எதிர்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து, அதற்கு இந்தியா என்று பெயரிட்டதால் மட்டும், மத்திய அரசு நாட்டின் பெயரை மாற்றுமா? நாடு 140 கோடி மக்களுக்கு சொந்தமானது. ஒரு கட்சிக்கு அல்ல. கூட்டணியின் பெயரை பாரத் என்று மாற்றினால் பாரதம் என்ற பெயரை பாஜக என்று மாற்றுவார்களா?" என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி கூட்டணிக்கு பாரத் என பேர் வச்சா அதையும் மாத்துவீங்களா?
இந்த விவகாரத்தில் பாஜகவை கடுமையாக சாடியுள்ள ஆம் ஆத்மி எம்பி ராகவ் சட்டா, "அதிகாரப்பூர்வ ஜி20 உச்சிமாநாட்டின் அழைப்பிதழ்களில் 'பிரசிடென்ட் ஆஃப் இந்தியா' என்பதை 'பிரசிடென்ட் ஆஃப் பாரத்' என்று மாற்றிய பாஜகவின் சமீபத்திய நடவடிக்கை பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது. பொது விவாதத்தை கிளப்பியுள்ளது.
பாஜக எப்படி 'இந்தியா'வை வீழ்த்த முடியும்? நாடு ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானது அல்ல. இது, 135 கோடி இந்தியர்களுக்கு சொந்தமானது. நமது தேசிய அடையாளம் பிஜேபியின் தனிப்பட்ட சொத்து அல்ல. அது அவர்களின் விருப்பத்தின் பேரில் மாற்றியமைக்க முடியாது" என பதிவிட்டுள்ளார்.