Delhi CM Arvind Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில், இன்று அமலாக்கத்துறை சோதனை செய்ய வாய்ப்புள்ளதாக அமைச்சர்கள் அதிஷி மற்றும் பரத்வாஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது?
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் என, அவரது அமைச்சரவையை சேர்ந்த இருவரே கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோர் இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். அதிஷி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் வியாழன்று காலை அமலாக்கத்துறை சோதனை செய்யப்பட உள்ளது. கைது செய்ய வாய்ப்புள்ளது” என குறிப்பிட்டுள்ளார். அவரை தொடர்ந்து சவுரப் பரத்வாஜ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் "டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு அமலாக்கத்துறையினர் நாளை காலை வருவர், அவரைக் கைது செய்ய வாய்ப்புள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைக்கு ஆஜராக மறுக்கும் கெஜ்ரிவால்..!
டெல்லி மதுபான ஊழல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை மூன்று முறை சம்மன் அனுப்பியும் இதுவரை, அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. டெல்லியில் நிர்வாகப் பணிகள் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையை மேற்கோள் காட்டி நவம்பர் 2 ஆம் தேதி முதல் சம்மனைத் தவிர்த்தார். தொடர்ந்து டிசம்பர் 3ம் தேதி அமலாக்கத்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், தான் ராஜ்யசபா தேர்தல் தொடர்பான பணிகளில் இருப்பதாகவும், கேள்வித்தாளை அனுப்பினால் அதற்கு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இதைதொடர்ந்து டிசம்பர் 21ம் தேதியன்று இரண்டாவது சம்மன் வந்தபோது, கெஜ்ரிவால் தனது முந்தைய கடிதங்களுக்கு ஏஜென்சி பதிலளிக்கவில்லை என்று கூறினார். தொடர்ந்து மூன்றாவது சம்மன் வந்தபோது நேற்று விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால், டெல்லியின் முதலமைச்சராக இருப்பதால் குடியரசு தினத்திற்கான பல நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளுக்கான திட்டமிடல் மற்றும் தயாரிப்பு தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளேன் என விளக்கமளித்தார். இவ்வாறு அடுத்தடுத்த 3 சம்மன்களையும் ஏற்று விசாரணைக்கு ஆஜராகாத நிலையில்தான், கெஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறலாம் என அவரது அமைச்சரவை சகாக்களே தெரிவித்துள்ளனர்.
பாஜக விமர்சனம்:
விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவாலை விமர்சித்துள்ள பாஜக, ”அவர் ஏன் பயப்படுகிறார்? மதுபான ஊழல் வழக்கில் தொடர்ந்து சிறையில் இருக்கும் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங்கைக் கைவிட்டாரா? அமலாக்கத்துறையின் சம்மன்கள் சட்டவிரோதமானது என்றால், அவர் நீதிமன்றத்தை நாடி இருக்கலாமே” எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.