டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சி தலைர்கள் மிரட்டப்படுவதாக தொடர் புகார் எழுந்தது.


அசாதாரண அரசியல் சூழல்:


குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி அமைச்சராக பதவி வகித்து வந்த சத்யேந்திர ஜெயின், டெல்லி துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் வரிசையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார்.


இதைத் தவிர்த்து, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதும் பெரும் பிரச்சினையாக வெடித்துள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவது, எதிர்க்கட்சிகள் வங்கி கணக்குகள் முடக்கப்படுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என விமர்சனம் எழுந்து வருகிறது.


உள்நாட்டை தாண்டி சர்வதேச நாடுகளிலும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. கெஜ்ரிவால் கைது தொடர்பாக ஜெர்மனி, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே கருத்து தெரிவித்துவிட்டது. இதற்கு இந்தியாவும் கடும் எதிர்வினையாற்றி இருந்தது.


குடியரசு துணை தலைவர் பரபர கருத்து:


இந்த நிலையில், இந்த விவகாரத்தில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று பதிலடி அளித்துள்ளார். இந்தியா ஒரு தனித்துவமான ஜனநாயக நாடு என்றும் சட்டத்தின் ஆட்சி குறித்து யாரும் தங்களுக்கு பாடம் கற்று தர தேவையில்லை என்றும் விமர்சித்துள்ளார்.


நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், "வலுவான நீதித்துறையை கொண்ட ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. இதை எந்த ஒரு தனிநபராலும் அல்லது எந்த குழுவாலும் சமரசம் செய்ய முடியாது. சட்டத்தின் ஆட்சி குறித்து இந்தியாவுக்கு யாரிடமிருந்தும் பாடம் தேவையில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்தியாவில் புதிய நடைமுறை. தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்தவர்கள் மீதும் தற்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றார்.


கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்ததை மறைமுகமாக விமர்சித்த குடியரசு துணை தலைவர், "நாம் என்ன பார்க்கிறோம்? சட்டம் அதன் போக்கை எடுக்கும் தருணத்தில், அவர்கள் தெருக்களில் இறங்குகிறார்கள், விவாதங்களில் கத்துகிறார்கள், மனித உரிமைகள் என சொல்லிக் கொண்டு மோசமான குற்றத்தை மறைக்கிறார்கள். இது நம் கண் முன்நடக்கிறது.


சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கும்போது, ஒரு நபரோ அல்லது நிறுவனமோ அல்லது ஒரு அமைப்போ வீதியில் இறங்குவது என்ன நியாயம்?" என தெரிவித்தார்.