நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வரும் 19ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் ஜூன் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவை இந்த முறை வீழ்த்த வேண்டும் என நோக்கில் காங்கிரஸ் தீவிரமாக வேலை செய்து வருகிறது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது.
ராகுல் காந்தி அடுத்த அதிரடி:
விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. கல்வியிலும் அரசின் வேலைவாய்ப்புகளிலும் பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 50 சதவிகித இட ஒதுக்கீடு வரம்பு தளர்த்தப்படும் என அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்துள்ளது
இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றொரு முக்கிய வாக்குறுதியை வழங்கியுள்ளார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள மக்களிடையே சொத்துகளை பகிர்ந்தளிக்க சொத்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, "இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), பட்டியல் சாதியினர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் சிறுபான்மையினர் எத்தனை பேர் என்பதை கண்டறிய முதலில் நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்.
சொத்துகளை பகிர்ந்தளிக்க கணக்கெடுப்பு:
அதன்பிறகு, வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக சொத்துகளை பகிர்ந்தளிக்க சொத்து கணக்கெடுப்பு நடத்துவோம்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "அனைத்துத் துறைகளிலும் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதை காங்கிரஸ் உறுதி செய்யும்.
மக்களுக்கு உரிய பங்கை அளிப்பதை காங்கிரஸ் உறுதி செய்யும். மொத்த மக்கள் தொகையில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் 90 சதவீதம் உள்ளனர். ஆனால், அவர்களை அரசு வேலைகளில் பார்ப்பதில்லை. உண்மை என்னவென்றால், இந்த 90 சதவீத மக்களுக்கு உரிய பங்கு தரப்படவில்லை.
நாட்டின் நிர்வாகத்தை 90 ஐஏஎஸ் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களில் மூன்று பேர் மட்டுமே ஓபிசி, ஒருவர் ஆதிவாசி. மூன்று பேர் மட்டும் தலித்தாக உள்ளனர்" என்றார்.
தனியார் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்படும் என்றும் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் நீதிபதிகள், சட்ட அதிகாரிகள், அரசு நிறுவனங்களின் வாரியங்களில் இயக்குநர்கள் போன்ற உயர் பதவிகளில் அதிகமான பெண்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது.