டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கததுறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சிறையில் இருந்து வெளியே வந்து மக்கள் மத்தியில் பேசியுள்ளார். 


சுதந்திர காற்றை சுவாசித்த அரவிந்த் கெஜ்ரிவால்: 


டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து சிறைக்கு அனுப்பப்பட்டனர். டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தொடங்கி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் என அடுத்தடுத்து அதிரடி கைது நடந்தது.


இறுதியாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். 6 மாத சட்ட போராட்டத்திற்கு பிறகு, சஞ்சய் சிங்குக்கு சமீபத்தில் பிணை கிடைத்தது. ஆனால், மணீஷ் சிசோடியாவுக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பிணை கிடைக்காமல் இருந்தது.


தேர்தல் நெருங்கும் சூழலில், ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியை சந்தித்து வந்தது. பெரிய சட்டப்பேராட்டத்திற்கு பிறகு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று இடைக்கால பிணை கிடைத்துள்ளது. வரும் ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், அவரை வரும் ஜூன் 2ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டுள்ளது.


"சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடுகிறேன்"


இடைக்கால ஜாமின் வழங்கியதையடுத்து, இன்று மாலை அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்தார். திகார் சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


குவிந்திருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "நான் சீக்கிரம் வெளியே வருவேன் என சொன்னேனா இல்லையா? நான் திரும்பி வந்துவிட்டேன். என்னிடம் உள்ள அனைத்தையும் கொண்டு சர்வாதிகாரத்திற்கு எதிராக நான் போராடுகிறேன்.


இப்போது 140 கோடி பேர் அதைச் செய்ய வேண்டும். தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாளை காலை 11 மணிக்கு, கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோயிலுக்கு நாம் அனைவரும் செல்ல உள்ளோம்.


 






பின்னர் மதியம் 1 மணிக்கு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும். உங்கள் அனைவரையும் அனுமன் கோயிலுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார். 


இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு சரமாரியான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்துவிட்டு ஒன்றரை ஆண்டுகள் கழித்து அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? என்ற கேள்வியை அமலாக்கத்துறை முன்பு நீதிபதிகள் முன்வைத்தனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் ஆட்சேபனைகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.