நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை கடந்த 10 நாட்களுக்கு மேலாக மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.  இந்நிலையில் இன்று கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் ஆக்சிஜன் தட்டுபாடு மற்றும் தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவது உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 


இக்கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது இவர் கூட்டத்தை நேரலை செய்தார். இதனைத் தொடர்ந்து கெஜ்ரிவால் கூட்டத்தில் தனது பேசிக் கொண்டிருக்கும்போது பிரதமர் மோடி அவரை பாதியில் நிறுத்தினார். அப்போது, “இது எப்போதும் இருக்கும் நடைமுறைக்கு எதிரானது. உயர் அலுவலர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தை மாநில முதலமைச்சர் நேரலை செய்வதா? இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது” என்று கோபமாக பேசினார். 




இதற்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், “தவறுக்கு மன்னிக்கவும். இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்” எனக் கூறி மன்னிப்பு கேட்டார். கெஜ்ரிவாலின் இந்தச் செயல் அரசியல் நோக்கங்களுக்காக செய்யப்பட்டது என்று மத்திய அரசில் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். முன்னதாக இந்தக் கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லி மக்கள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மிகுந்த வலியுடன் உள்ளனர். தற்போது இருக்கும் நிலைமையைப் பார்த்தால் பெரிய அளவில் அசம்பாவிதம் நடைபெறும்போல் தோன்றுகிறது. மற்ற மாநில முதலமைச்சர்கள் உடனடியாக டெல்லிக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வர உதவி செய்யுங்கள் என்று உங்களிடம் கைகூப்பி வேண்டுகிறேன். 


டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் இடம் இல்லை என்றால் டெல்லி மக்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காதா? டெல்லி வரவேண்டிய ஆக்சிஜன் சிலிண்டர் தடைப்பட்டு மற்ற மாநிலத்தில் இருந்தால் நான் எந்த மத்திய அரசு அதிகாரியை தொடர்புகொள்ள வேண்டும்” என்ற கேள்வியையும் எழுப்பினார். 




டெல்லியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பலர் ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டு இறந்து வருகின்றனர். குறிப்பாக இன்று கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 25 நோயாளிகள் மரணம் அடைந்துள்ளனர். இதனால் டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகவும் மோசமடைந்துள்ளது.  இந்தச் சூழலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதைக் கேட்டிருக்கிறார். 


இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அலுவலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "இன்று பிரதமருடன் முதல்வர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேரலை செய்யப்பட்டது.  எங்களுக்கு இந்தக் கூட்டத்தை நேரலை செய்யக்கூடாது என்று எந்தவித முன் அறிவிப்பும் வரவில்லை. இதனால் தான் நாங்களை இந்தக் கூட்டத்தை நேரலை செய்தோம். மேலும் இதுபோன்ற ரகசிய தகவல்கள் பரிமாற்றம் இல்லாத கூட்டங்கள் பல இதற்கு முன்பாக நேரலை செய்யப்பட்டுள்ளன. ஏதாவது தவறு நேர்ந்திருந்தால் அதற்கு நாங்கள் வருந்துகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.