கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு வேகமாக பரவிவருவது கவலையளிக்கும் விதமாக உள்ளது. ஊரடங்கில் மீண்டும் கடுமையான கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் வேகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 2.95 லட்சம், நேற்று 3.14 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 3.32 லட்சமாக உயர்ந்தது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 965-இல் இருந்து ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 695- ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,263 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 657-ல் இருந்து ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 920-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 279 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 34 லட்சத்து 54 ஆயிரத்து 880-இல் இருந்து ஒரு கோடியே 36 லட்சத்து 48 ஆயிரத்து 159 ஆக உள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 84.46 சதவீதம் மற்றும் உயிரிழப்பு விகிதம் 1.16 சதவிகிதமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 24 லட்சத்து 28 ஆயிரத்து 616-ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 188 பேர் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 13 கோடியே 54 லட்சத்து 78 ஆயிரத்து 420 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 14 கோடியே 53 லட்சத்து 15 ஆயிரத்து 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 84 ஆயிரத்து 441 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 கோடியே 33 லட்சத்து 3 ஆயிரத்து 265 ஆக உள்ளது. ஒரு கோடியே 88 லட்சத்து 17 ஆயிரத்து 424 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 83 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஆலோசனை நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து, ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுவனங்களுடன் முற்பகல் 12.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். தற்போது, பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு இந்த ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறார்.