தேசிய தலைநகர் டெல்லியில் ரோஹிணி நகரில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளி அருகே இன்று காலை வெடிச் சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குண்டுவெடிப்பா என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை.


டெல்லியில் பதற்றம்:


பிரசாந்த் விஹார் பகுதியில் இந்த பள்ளி அமைந்துள்ளது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என டெல்லி தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏதோ ஒன்று வெடித்ததன் காரணமாக பள்ளி சுவர், அருகில் உள்ள கடைகள், கார் ஆகியவை சேதமடைந்தன.


இதுகுறித்து தீயணைப்பு துறை தரப்பில் கூறுகையில், "காலை 7.50 மணியளவில் சிஆர்பிஎஃப் பள்ளியின் சுவர் அருகே குண்டுவெடிப்பு நடந்ததாக எங்களுக்கு அழைப்பு வந்தது. உடனடியாக இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். ஆனால், அங்கு தீ எதுவும் ஏற்படவில்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனவே எங்கள் வாகனம் திரும்பிவிட்டது" என தெரிவித்தது.


நடந்தது என்ன?


சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து, காவல்துறை, தீயணைப்பு துறை, ஆம்புலன்ஸ் ஆகியவை விரைவாக சென்றன. செக்டார் 14இல் உள்ள சிஆர்பிஎப் பள்ளிக்கு அருகே பலத்த வெடிச்சத்தம் கேட்டிருக்கிறது. அது எதனால் நடந்தது அதன் மூலத்தைக் கண்டறிய தீயணைப்பு இயந்திரங்கள், வெடிகுண்டு செயலிழப்பு படை மற்றும் காவல்துறை தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.


 






சம்பவ இடத்தில் நடந்த வெடிப்புக்கு காரணமான பொருள், பெட்ரோல் குண்டு போல இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், முழுமையான தகவல்கள் கிடைத்த பிறகே இதன் முழு விவரங்கள் தெளிவாகத் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுகுறித்து டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கூறுகையில், "இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சட்டம் ஒழுங்கு பொறுப்பு பாஜகவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை மத்திய அரசின் கீழ் வருகிறது" என விளக்கம் அளித்துள்ளார்.