கடந்த 2014ஆம் ஆண்டு, பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே, பல பாரம்பரிய நினைவு சின்னங்கள், வரலாற்று இடங்களுக்கு வேறு பெயர்கள் சூட்டப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில், டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்திற்கு பிரதம மந்திரி அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என பெயர் மாற்றப்பட்டது.
தொடரும் பெயர் மாற்றும் படலம்:
இந்த நிலையில், லுடியன்ஸ் டெல்லி பகுதியில் அமைந்துள்ள அவுரங்கசீப் சாலைக்கு பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதற்கு, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்றப்பட்டதற்கு டெல்லி மாநகராட்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி மாநகராட்சியின் துணை தலைவர் சதீஷ் உபாத்யாய் கூறுகையில், "இன்று நடைபெற்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அவுரங்கசீப் சாலைக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்.
கடந்த 2015ஆம் ஆண்டே, அவுரங்கசீப் சாலைக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலை என டெல்லி மாநகராட்சி கவுன்சில் பெயர் மாற்றியது. ஆனால், அதற்கு இஸ்லாமிய குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
அவுரங்கசீப் சாலைக்கு பெயர் மாற்றம்:
"இது ஒரு திட்டமிட்ட முயற்சி. இது இங்கேயே நிற்காது. ஏனென்றால், இந்த சாலைக்கு அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்ட உடனேயே, முகலாய பேரரசரின் கல்லறை அமைந்துள்ள மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தின் பெயரை மாற்றப்போவதாக சிவசேனா கூறியது.
வரலாற்றில் இடம்பிடித்தவர்கள், முஸ்லீம் பேரரசர்களின் பெயர்களை கொண்ட நகரங்கள்/சாலைகளின் நீண்ட பட்டியல் அவர்களிடம் உள்ளது. அதை அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள்" என வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் டாக்டர் எஸ் கியூ ஆர் இல்யாஸ் தெரிவித்துள்ளார்.
வரலாற்றாசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களில் சிலர், அவுரங்கசீப் சாலைக்கு பெயர் மாற்றும் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து வரலாற்றாசிரியர் நாராயணி குப்தா கூறுகையில், "மக்களுக்கு வரலாற்று உணர்வு இல்லாததால்தான் இதுபோன்ற பிரச்சினைகள் எழுகின்றன.
அவரங்கசீப், அக்பர், ஷாஜஹான் போன்ற முகலாய ஆட்சியாளர்களின் பெயரை இடங்களுக்க சூட்டியது ஆங்கிலேயர்கள்தான்.
புது டெல்லியை புதிய தலைநகராக வடிவமைத்தபோது, அவர்கள் இந்த பெயரை சூட்டினர்" என்றார்.
மத்திய அரசின் பெயர் மாற்றும் படலத்தின் தொடர்ச்சியாக, டெல்லியில் உள்ள கிங்ஸ்வே சாலைக்கு ராஜ்பாத் சாலை என்றும் குயின்ஸ்வே சாலைக்கு ஜன்பத் சாலை என்றும் பெயர் மாற்றப்பட்டது. குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் படேல் கிரிக்கெட் மைதானத்தின் பெயர் நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றப்பட்டது.
முன்னாள் வைஸ்ராயின் பெயரை கொண்டிருந்த மிண்டோ பூங்காவின் பெயர் ஷாஹீத் பகத் சிங் உத்யன் என மாற்றப்பட்டது. மற்றொரு கவர்னர் ஜெனரலின் பெயரை கொண்டிருந்த ஆக்லாந்து சதுக்கம், பெஞ்சமின் மோலோயிஸ் சதுக்கமாக பெயர் மாற்றப்பட்டது.