தலைநகர் டெல்லியில் பொதுவாகவே அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பசுமைக் கழிவுகளாலும், காற்றின் திசை மற்றும் காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் காற்று மாசுபாடு அதிகரித்து காற்றின் குறியீட்டுத் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீபாவளிப் பட்டாசுகள் காரணமாக காற்று மாசுபாடு மற்றொரு புறம் ஆண்டுதோறும் அதிகரிப்பது வழக்கம்.


கடும் மாசுபாடடைந்த காற்றின் தரம்


ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள்களில் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் காற்று மாசுபாடு குறைந்தது. இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் ட்விட்டர் பக்கத்தில்  கடந்த அக்டோபர் 24-ந் தேதி பதிவிட்டிருந்தார்.


 






இந்நிலையில்,  தீபாவளிக்கு அடுத்தடுத்த நாள்களில் டெல்லியின் முக்கியப் பகுதிகளில் காற்றின் தரம் கடுமையாக பாதிப்படையத் தொடங்கியது. இன்று (அக்.29) மதியம் ஒரு மணியளவில் காற்றின் தரக் குறியீடு 400 முதல் 500 என்ற வரம்புக்குள் பதிவாகி மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.


கடந்த ஜனவரி மாதத்திலிருந்து காற்று மாசுபாடு அளவு மிக மோசமாக உயர்ந்த நிலையில், டெல்லியின் சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 500 என்ற அளவை எட்டியது. அதன் பின் தற்போது காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளது.


 






இந்நிலையில் முன்னதாக வெளியான காற்றின் தரம் பற்றிய முன்னறிவிப்பின்படி, குறைந்தது இரண்டு நாள்களுக்கு மிகவும் மோசமான பிரிவில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிவப்பு விளக்கு ஆன், காடி ஆஃப் பிரச்சாரம்


முன்னதாக, நாட்டின் தலைநகரில் வாகன மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக ‘சிவப்பு விளக்கு ஆன், காடி ஆஃப்’ என்ற பிரச்சாரத்தை நேற்று (அக்.28)  முதல் தொடங்க டெல்லி அரசு திட்டமிட்டிருந்தது. இதனை சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.


 2020ஆம் ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்ட இந்தப் பிரசாரத்தின் கீழ் டெல்லியில் வாகன மாசுபாட்டைக் குறைக்க, ட்ராஃபிக்கில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும்போது  பச்சை விளக்கு மாறும் வரை தங்கள் வாகனங்களை அணைக்க ஊக்குவிக்கப்படுகிறாா்கள்.


ஆனால் இந்த ஆண்டு டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா ஒப்புதல் அளிக்காத நிலையில், ஆளுநர் வேண்டுமென்றே இந்த ஆண்டு தங்களுக்கு ஒப்புதல் அளிக்காததாகவும் மத்திய பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்களின் படி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் ஆத் ஆத்மி கட்சியினர் தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில் டெல்லி துணை நிலை ஆளுநர் அலுவலகம் முன்பு முன்னதாக ஆம் ஆத்மி கட்சியினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


காற்றின் தரக் குறியீடு AQI அளவீடு:


0 - 50க்கு இடைப்பட்ட AQI - நல்லது 


51 - 100 - திருப்திகரமானது 


101 - 200 - மிதமானது 


201 - 300 - மோசம்


301 - 400 - மிக மோசம்


401 - 500 - கடுமயான மாசுபாடு