சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இறுதியாக, விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகளால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா பாதிப்பு:


இருப்பினும், கொரோனா வைரஸ், உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கிறது. இச்சூழலில்தான், நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு ஜேஎன் 1 வகை என்று கண்டறியப்பட்டுள்ளது. 


குறிப்பாக தென் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு  கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.  கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகா மற்றம் சண்டிகரில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு:


இதற்கிடையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 702 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,097 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 


மகாராஷ்டிராவில் 2 பேரும், டெல்லி, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,33,346 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா இறப்பு விகிதம் 1.18 சதவீதமாக உள்ளது.  மேலும், கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளவர்களின் எண்ணிக்கை 4,44,73,448 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது.


டெல்லி எய்ம்ஸ் சொன்னது என்ன?


இந்த நிலையில், கொரோனா நோயாளிகள் தொடர்பாக வழிகாட்டுதல்களை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதன்படி, சுவாச தொற்று, தொடர் இருமல், தொடர் காய்ச்சல் இருப்பவர்கள் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.


இணை நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வரும்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று  தெரிவித்திருக்கிறது.  டெல்லியில் ஜேஎன் 1 கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறது. 


முன்னதாக, எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் ரந்தீப் குலேரியா, “புதிய கொரோனா வேரியண்டான  JN.1 மிகவும் வேகமாக பரவுகிறது. அதிக நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது. ஆனாலும் கடுமையான நோய்த்தொற்றுகள் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது போன்ற சூழலை ஏற்படுத்தவில்லை. இந்த வேரியண்ட் படிப்படியாக ஆதிக்கம் செலுத்துகிறது. பெரும்பாலும், காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் மற்றும் உடல்வலி போன்றவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன" என்றார்.