டெல்லியில் 20 வயது இளம்பெண்ணை மோதி கொடூர விபத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த அதிர்ச்சி தகவலை காவல்துறை வெளியிட்டுள்ளது. புத்தாண்டு தினத்தன்று நடந்த இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது.


ஆரம்பத்தில், பாதிக்கப்பட்ட பெண் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது காரை மோதி விபத்துக்கு உள்ளாக்கியதாக 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.


பிறகு, அந்த பெண் காரின் அடியில் சிக்கிய நிலையில், கிட்டத்தட்ட 13 கீமீ தூரத்திற்கு அவர் இழுத்து செல்லப்பட்டார். நிர்வாண நிலையில் உடலில் பல காயங்களுடன் அந்த பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.


முன்னதாக, விபத்தை ஏற்படுத்திய காரில் 5 பேர் இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், அந்த காரில் 4 பேர் மட்டுமே இருந்ததாக காவல்துறை தரப்பு இன்று தெரிவித்துள்ளது.


முன்னதாக, விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியவராக குற்றம்சாட்ட நபர் சம்பவ தினத்தன்று அந்த காரையே ஓட்டவில்லை என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.


தீபக் கண்ணா, மனோஜ் மிட்டல், அமித் கண்ணா, கிரிஷன் மற்றும் மிதுன் ஆகியோர் சம்பவம் நடந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, மேலும், இருவர் காரில் இருந்தவர்களை பாதுகாக்க முயன்றதாகவும், மறைமுகமாக உதவி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.


காரின் உரிமையாளர் அசுதோஷ் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏழாவது குற்றவாளியான அங்குஷை போலீசார் தேடி வருகின்றனர். விபத்து சம்பவம் குறித்து பேசிய காவல்துறை தரப்பு, "அஞ்சலி சிங் என்ற இளம்பெண் மீது கார் மோதியபோது அதை ஓட்டியவர் அமித் கண்ணா. அவரது உறவினர் தீபக் அல்ல. 


உண்மையாகவே, தீபக் கண்ணா வீட்டில் இருந்திருக்கிறார். ஆனால், அமித் கண்ணாவிடம் காரை ஓட்டுவதற்கான உரிமம் இல்லாததால் அதை பழியை தீபக் ஏற்று கொண்டார்" எனத் தெரிவித்துள்ளது. 


சுல்தான்புரியில் புத்தாண்டு கொண்டாட்டம் நள்ளிரவில் தொடங்கிய சில மணி நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் மோதி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் அஞ்சலி (20) உயிரிழந்தார். அவரது ஸ்கூட்டியில் மோதிய பிறகு, கார் 10-12 கிமீ தூரம் சென்றது, காரின் அடிப்பகுதியில் அவரது கைகால்கள் சிக்கிக்கொண்டன.


அந்தப் பெண்ணின் தாயார் ரேகா, தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என கூறினார். "அவளுடைய ஆடைகளை முழுவதுமாக கிழிக்கப்பட்டு இருந்திருக்கிறது. அவர்கள் அவளைக் கண்டுபிடிக்கும் போது அவளது உடல் முழுவதும் நிர்வாணமாக இருந்தது. எனக்கு முழு விசாரணையும் நீதியும் வேண்டும்," என்று அவர் கூறினார்.