மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. தொழில்வளத்தை பெருக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் சாடப்படுகிறது. இந்நிலையில், நாட்டில் வேலையின்மை அதிகரிப்பால் இளைஞர்கள், பல பிரச்னைகளுக்கு ஆளாவதாக தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேசியுள்ளார்.
சரத் பவார் பேச்சு:
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அக்கட்சியின் மாநிலம் தழுவிய ஜன் ஜாகர் யாத்ரா எனும் நடைபயணத்தை தொடங்கி வைத்து சரத் பவார் உரையாற்றினார். அப்போது நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளுக்கு மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகள் தான் காரணம் என குற்றம்சட்டினார்.
வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு
தொடர்ந்து, "வழக்கம்போல் நான் மேற்கொள்ளும் சுற்றுப்பயணங்களின் போது, கிராமங்களை பார்வையிடுவது இயல்பு. அந்த நேரங்களில் எல்லா கிராமங்களிலும் 25 முதல் 30 வயதுக்குட்பட்ட 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அந்த ஊர்களில் இருக்கக்கூடிய ஏதேனும் ஒரு பொது சதுக்கத்தில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் சென்று நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என விசாரிப்பேன். அதில் சிலர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலையில்லாமல் இருப்பதாக கூறினார்கள். சிலர் முதுகலை பட்டம் முடித்து விட்டு வேலை தேடுவதாகவும் கூறினார்கள். திருமணமாகி விட்டதா என்று கேட்டபோது, அனைவருமே திருமணம் ஆகவில்லை என்று தான் பதிலளித்தனர்.
”இளைஞர்களுக்கு திருமணம் நடப்பதில்லை”
மகாராஷ்டிராவின் பெரும்பாலான கிராமங்களில் நிலைமை இப்படித்தான் உள்ளது. வேலையில்லாத நபருக்கு பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை. திருமண வயது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பற்றாக்குறை, மணமகள் கிடைக்காததால் சமூகப் பிரச்சினைகளை உருவாகின்றன. நாட்டில் படித்த இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கும் போது பாஜக இரு மதங்களுக்கு இடையே வெறுப்பை தூண்டி அரசியல் செய்கிறது. தேர்தல் நேரத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதாக வாக்குறுதி வழங்கிவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் பாஜக வெறுப்பு அரசியலை செய்து வருகிறது" என, பாஜகவை சரத் பவார் கடுமையாக விமர்சித்தார்.
5 பெரிய முதலீடுகளை இழந்த மகாராஷ்டிரா:
மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பெரும்பாலான எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பாஜகவுடன் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்ரேவின் ஆட்சியை கடந்த ஆண்டு கவிழ்த்தார். இதன் காரணமாக மகாராஷ்டிராவில் நிலவிய அரசியல் குழப்பம் காரணமாக, ஒரே ஆண்டில் 5 பெரிய முதலீடுகளை இழந்தது. அதன்படி, மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனங்களுக்கான பிரத்யேக உற்பத்தி மண்டலத்தை, மத்திய பிரதேசத்திற்கு தாரை வார்த்தது. அதோடு, ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான பாக்ஸ்கான்-வேதாந்தா கூட்டு திட்டம், ரூ. 22,000 கோடி மதிப்பிலான டாடா ஏர்பஸ் ஆலை, மருத்துவ மருந்து பூங்கா மற்றும் மொத்த மருந்து பூங்கா திட்டங்களையும் பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான குஜராத்திடம் மகாராஷ்டிரா அரசு இழந்தது குறிப்பிடத்தக்கது.