இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக் கழகத்தில் ஜே.என்.யூ பல்கலைக் கழகம் ஒன்று. இங்கு சமீப காலங்களாக மாணவர்கள் இடையே அடிக்கடி சில மோதல் சம்பவங்கள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு மோதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இம்முறை ஏபிவிபி பிரிவு மாணவர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.


இது தொடர்பாக ஏபிவிபி சார்பில் ஒரு ட்விட்டர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், “ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தின் ரெக்டார் செய்த ஊழலை இன்று நாங்கள் வெளிப்படையாக வெளி கொண்டு வந்தோம். அவர்கள் நீண்ட நாட்களாக ஆராய்ச்சி மாணவர்களுக்கு தர வேண்டிய நிதியை வெளிவிட வில்லை. இதை தட்டி கேட்க சென்ற மாணவர் பிரிவை அவருடைய பாதுகாவலர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளது. இந்த மோதலில் ஏபிவிபி மாணவர் அமைப்பின் தலைவர் மற்றும் ஒரு நபர் ஆகிய இருவரும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 






மேலும் இந்த மோதலில் 4 மாணவிகள் உள்பட 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இந்தச் சம்பவம் தொடர்பாக ஜே.என்.யூ மாணவர்கள் சங்க தலைவர் கோஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “ஏபிவிபி மாணவர்கள் அமைப்பு தன்னால் முடிந்தவற்றை சிறப்பாக செய்துள்ளது. அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பாதுகாவலர்களை தாக்கி ஆவணங்களை கைப்பற்ற முயற்சி செய்துள்ளனர். இதற்கு முன்பாக அவர்களுடைய வன்முறையில் சில மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது ஜே.என்.யூ பாதுகாவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளார். 






இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


ஜே.என்.யூ என்பது அரசியல் லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளும் இடமல்ல -துணைவேந்தர்:


முன்னதாக ஜே.என்.யூ துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் கடந்த மாதம் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அதில், `ஜே.என்.யூ என்பது அரசியல் லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ளும் இடமல்ல.. பல்கலைக்கழக வளாகத்தில் இதற்கு முன்பாக அரசியல் செய்தவர்கள் தற்போது சிறையில் இருக்கின்றனர். மொழி என்பது சற்றே முக்கியமானதொரு விவகாரம்.. குறிப்பிட்ட ஒரு மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது பிராந்தியவாதத்தில் முடியும்’ எனக் கூறியிருந்தார்.