Rahul Gandhi: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை: என்ன சொல்லப் போகிறது உச்சநீதிமன்றம் - இன்று விசாரணை!

அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து, ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறயீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Continues below advertisement

அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை  எதிர்த்து, ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறயீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Continues below advertisement

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:

மோடி சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டப்போது, அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தை நாடினார்.

வழக்கு விசாரணை:

அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு தடை கோரிய வழக்கில்,  கடந்த 18ம் தேதி ராகுல் காந்தி சார்பில் மூத்த வக்கீல் சிங்வி ஆஜரானார். அப்போது,  இந்த மனுவை ஜுலை 21 அல்லது 24ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு 21ம் தேதி அதாவது இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார். அதன்படி இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பி.ஆர்.கவாய், பிரசாந்த்குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கிறது.

கேவியட் மனு:

இதனிடையே, ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது தனது கருத்தையும் கேட்க வேண்டும் என புர்னேஷ் மோடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால் அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற முடியும் என்பதால், உச்சநீதிமன்றம் வழங்க உள்ள தீர்ப்பு தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கு கடந்து வந்த பாதை:

கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது மோடி எனும் சமூகப் பெயரை இழிவுபடுத்தும் விதமாக, அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாஜக எம்எல்ஏவும் குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி தொடர்ந்த வழக்கில்,  ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் ராகுல் காந்தி இழிவுபடுத்தியுள்ளதாக என்று குற்றம் சாட்டினார். 

2 ஆண்டுகள் சிறை தண்டனை:

வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2023ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், அவருக்கு அன்றே ஜாமீன் வழங்கப்பட்டது, இதனால் அவர் 30 நாட்களுக்குள் தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அவரது தண்டனைக்கு ஆட்சேபம் தெரிவித்த ராகுல் காந்தி, சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகி, தனது தண்டனைக்கு தடை விதிக்கக் கோரினார். இது ஏப்ரல் 20 அன்று நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து,   தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை குஜராத் உயர்நீதிமன்றமும் கடந்த 7ம் தேதி தள்ளுபடி செய்தது. அதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுதான், உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

Continues below advertisement