பஞ்சாபி திரைப்பட நடிகரும், சமூக ஆர்வலருமான தீப் சிங் சித்து சாலை விபத்தில் இன்று உயிரிழந்தார். 37 வயதில் அவர் மரணமடைந்திருப்பது விவசாயிகளுக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அருகே குண்ட்லி-மனேசர் நெடுஞ்சாலையில் இன்று நடந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்ததாக சோனிபட் காவல்துறை உறுதி செய்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2021ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி செங்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த தீப் சித்து..?
தீப் சிங் சித்து ஒரு பஞ்சாபி நடிகர் மற்றும் பஞ்சாபி ஃபிலிம் இண்டஸ்ட்ரி மற்றும் ஹிந்தி ஃபிலிம் இண்டஸ்ட்ரியுடன் தொடர்புடைய மாடல் ஆவார். அவர் 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார். அவர் பிறந்த இடம் பஞ்சாப்பில் உள்ள முக்த்சர் ஆகும். தனது சொந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதன்பின்பு, பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் சட்டத்தில் பட்டமும் பெற்றார்.
பின்னர், 'கிங்பிஷர் மாடல் ஹன்ட்' போன்ற மாடலிங் போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்று 'கிராசிம் மிஸ்டர் பெர்சனாலிட்டி' என்ற பட்டத்தைப் பெற்றார். ஹேமந்த் திரிவேதி, ரோஹித் காந்தி போன்ற வடிவமைப்பாளர்களுக்காக மும்பையில் ராம்ப் வாக் செய்துள்ளார். மாடலிங் துறையில் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. அதனால் அவர் ஒரு வழக்கறிஞராகப் பயிற்சி செய்யத் தொடங்கினார். சஹாரா இந்தியா பரிவாரில் சட்ட ஆலோசகராகவும், பின்னர் ஹேமண்ட்ஸ் மற்றும் பாலாஜி டெலிபிலிம்ஸ் என்ற பிரிட்டிஷ் சட்ட நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டார்.
பாலாஜி டெலிஃபிலிம்ஸின் சட்டப்பூர்வ தலைவராக பணிபுரியும் போது, ஏக்தா கபூர் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.
தர்மேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரித்த பஞ்சாபி திரைப்படமான ‘ராம்தா ஜோகி’ மூலம் தீப் தனது நடிப்பை தொடங்கினார். 2017 ஆம் ஆண்டில் வெளியான அவரின் 'ஜோரா 10 நம்பரியா' பிளாக்பஸ்டர் ஹிட்டானது. பின்னர் ரங் பஞ்சாப், சாதே ஆலே மற்றும் ஜோரா - தி செகண்ட் ஆகிய படங்களில் நடித்தார்.
அரசியல் பயணம்:
சித்து 2019 இல் அரசியலில் இறங்கினார். குர்தாஸ்பூர் பாஜக எம்பி மற்றும் பாலிவுட் நடிகர் சன்னி தியோலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். சன்னி தியோலுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக ஆர்வலரான சித்து விவசாயம் மற்றும் விவசாயிகளின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். டெல்லியில் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது, கடந்த 2021ஆம் ஆண்டு விவசாயிகள் குடியரசு தின அணிவகுப்பின் போது செங்கோட்டையில் கலவரத்தைத் தூண்டி மதக் கொடியை ஏற்றியதற்காக சித்துவை போலீசார் கைது செய்தனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்தாலும், இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் வெளியே வந்தார். தற்போது கார் விபத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்