மகாராஷ்ட்ரா மாநிலத்தின் வசாய் விரார் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நன்கு பரிச்சயமுள்ள 17 வயது சிறுவன் அவரின் அந்தரங்கப் புகைப்படங்களைச் சிலருடன் பகிர்ந்தது, சிறுமியின் தற்கொலை முயற்சிக்கான காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி அபாய கட்டத்தில் இருந்து மீண்டுள்ளதாக மருத்துவமனையில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சிறார் கூர்நோக்கு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். 


ஒரே பகுதியில் வாழ்ந்து வந்ததால், 17 வயது சிறுவனுக்கும், 16 வயது சிறுமிக்கும் இடையில் ஏற்கனவே பரிச்சயம் இருந்ததாக காவல்துறையினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தின் போது, வகுப்புகள் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றம் சாட்டப்பட்ட சிறுவன், சிறுமியுடன் நெருக்கமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. 



கடந்த வாரம், பாதிக்கப்பட்ட சிறுமியின் மற்றொரு தோழி அவரிடம் அவரது அந்தரங்கப் புகைப்படத்தைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவன் சிலருக்குப் பகிர்ந்துள்ளதாகக் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வசாய் விரார் பகுதியில் தனது உறவினர் வீட்டில் இருந்த போது, இந்த விவகாரம் குறித்து தெரிந்து கொண்ட பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். எலி மருந்தைச் சாப்பிட்ட இந்தச் சிறுமி, வசாய் விரார் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு விரைந்து எடுத்துச் செல்லப்பட்ட சிறுமி, மேற்கட்ட சிகிச்சைகளுக்காக மும்பையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். 



பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது தேறி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. மயக்கம் தெளிந்த பாதிக்கப்பட்ட சிறுமியிடம் சார்கோப் பகுதி காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சட்டப்பிரிவுகள் 354 (பாலியல் துன்புறுத்தல்), 8 (பாலியல் ரீதியான தாக்குதல்), 12 (பாலியல் தொல்லை கொடுத்தல்) முதலானவற்றின் கீழ் வழக்குப் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் செல்ஃபோனைக் கைப்பற்றி, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.