முதல்வர் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும், ஒரு நாள் முதல்வர் அர்ஜூன் மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் ஆக்‌ஷனில் இறங்கி சஸ்பெண்ட் ஆர்டர்களைப் பறக்கவிடுவார். அப்படியொரு சம்பவத்தை ஒரு முதல்வர் நிஜமாகவே செய்துள்ளார். ஆம், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுஹான் தான் திரைப்பட பாணியில் இரண்டு அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளார். அதுவும் அரசு நிகழ்ச்சிக்காக விழா மேடையில் இருந்தவாறே அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகட்டுவதில் கூறப்பட்ட ஊழல் குற்றசாட்டுகளுக்காக இரண்டு அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நகர்ப்புற ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டம், 2015-ம் ஆண்டு ஜுன் மாதம் தொடங்கப்பட்டது. இதன்மூலம், நகர்ப்புற ஏழை மக்களுக்காக இரண்டு கோடி வீடுகளை மார்ச் 2022-க்குள் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


இந்தத் திட்டத்தின்படி, ரூ.12 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு ஊதியம் பெறுபவர்கள், ரூ.9 லட்சம் வரை வீடு கட்டுவதற்கான கடன் உதவியைப் பெறலாம். மேலும், ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை ஊதியம் பெறுவோர் ரூ.12 லட்சம் வரை வீடு கட்டுவதற்கான கடன் உதவியைப் பெறலாம்.


ஆனால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் நாடு முழுவதுமே அவ்வப்போது ஊழல் குற்றச்சாட்டுகள் அம்பலமாகி வருகிறது. அந்த வகையில், மத்தியப் பிரதேசத்திலும் பிராதான் மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் இப்படியொரு ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது




இந்நிலையில் நிவாரியில் முதல்வர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பொதுமக்களை நோக்கி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் எதேனும் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாகத் தெரிந்தால் என்னிடம் தெரிவியுங்கள் என்றார். அப்போது கூட்டத்திலிருந்து உமா சங்கர், அபிஷேக் ரவுத் என்ற இரண்டு பெயர்கள் கோஷமாக உச்சரிக்கப்பட்டது. உமா சங்கர் தலைமை முனிசிபல் அலுவலராக இருந்தார். அபிஷே ரவுத் பொறியாளர். இந்த இருவருமே பிஎம்ஏஒய் திட்டத்தில் அதிகளவில் முறைகேட்டில் ஈடுபடுவதாக மக்கள் கூறியதால் சிவராஜ் சவுஹான் அவர்களை விழா மேடையில் இருந்தவாறே சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார்.


மேலும் பொருளாதார குற்றவியல் பிரிவு இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறும் அவர் உத்தரவிட்டார். ஊழலில் ஈடுபட்டவர்கள் சிறை செல்வது உறுதி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மத்தியப் பிரதேசத்தின் பிரித்விபூர் தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் ஒருபகுதியாக ஜன்தர்ஷன் யாத்திரா என்ற பேரணியை முதல்வர் ஒருங்கிணைத்து வருகிறார். அதன் ஒருபகுதியாகாவே நிவாரிக்கு முதல்வர் சென்றிருந்தார். நிவாரி, திகாம்கர் பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார்.


ஒர்சாவில் கல்லூரி கட்டுவதற்காக அவர் அடிக்கல் நாட்டினார். அதேபோல் மோகன்கர் பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார். ரூ.2 கோடியில் புதிய பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். பிரித்விபூரின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் பிரிஜேந்திர சிங் ரத்தோர் மறைந்ததையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடக்கவிருக்கிறது.