தனது காதலுக்கு காதலியின் தந்தை ஒத்துக்கொள்ளாத காரணத்தால், அவரை பழிவாங்குவதற்காக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொலை செய்யப்போவதாக, தனது காதலியின் தந்தைக்கு சொந்தமான எண்ணில் இருந்து மிரட்டல் செய்தியை அனுப்பி மிரட்டல் விடுத்த நபரை உ.பி. போலீசார் கைது செய்துள்ளனர்.


முதல்வர் யோகிக்கு கொலை மிரட்டல்


அமீன் என அடையாளம் காணப்பட்ட 19 வயது இளைஞன், காவல்துறையின் 112 அவசர எண்ணுக்கு, முதலமைச்சரைக் கொலை செய்யப் போவதாக மிரட்டி ஒரு செய்தியை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. “நான் முதல்வர் யோகியை விரைவில் கொன்றுவிடுவேன்” என்று ஏப்ரல் 23 இரவு 10.22 மணிக்கு போன் செய்து கூறியுள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட அமீன், தனது காதலியின் தந்தையின் தொலைபேசியில் இருந்து முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.



காதலுக்கு சம்மதிக்காத தந்தை


பேகம்பூர்வாவில் இருந்து கைது செய்யப்பட்ட அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் செய்தியை அனுப்ப பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் கைப்பற்றப்பட்டுள்ளது என்று கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (தெற்கு) அங்கிதா சர்மா தெரிவித்தார். அமீன் என்னும் 19 வயது இளைஞர் இ-ரிக்ஷா ஓட்டுபவரின் பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர்களது காதலுக்கு, காதலியின் தந்தை விருப்பமின்றி இருந்துள்ளார். இருவரையும் அவர் சேர விடமாட்டார் என்பதற்காக அவர் அவரது தொலைபேசியில் இருந்து முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுக்க சதித்திட்டம் தீட்டியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: GT vs MI, Match Highlights: பாவமாய் பறிபோன விக்கெட்கள்.. ஆரம்பம் முதலே மீளாத மும்பை.. கெத்தாக வெற்றிபெற்ற ஹர்திக் படை..!


பழிவாங்க திட்டம் தீட்டிய வாலிபர்


விசாரணையின் போது, அமீனின் பக்கத்து வீட்டார், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பியதால், தனது காதலியின் தந்தையை சிக்க வைக்க திட்டம் தீட்டி வந்ததாகவும், அதனால் இதுபோன்று செய்துள்ளார் என்றும் கூறியுள்ளனர். அமீன் அவரது செல்போனை திருடி, பாஸ்வேர்டு தெரியாததால் அதில் உள்ள சிம் கார்டை எடுத்து, தனது மொபைலில் போட்டு, இந்த மிரட்டல் காலை பேசியுள்ளார். இ-ரிக்ஷா ஓட்டுநரான பெண்ணின் தந்தை கடந்த 10 நாட்களுக்கு முன்பே தனது மொபைல் போன் தொலைந்து போனதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.



கைது செய்து வழக்குப்பதிவு


அமீன் தனது காதலியின் தந்தையின் மொபைல் போனை திருடியதையும், அவரது சிம் கார்டை பயன்படுத்தி செய்தி அனுப்பியதையும் ஒப்புக்கொண்டார். அவர் மீது மூன்று கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 506, 507 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 ஆகியவற்றின் கீழ் லக்னோவில் உள்ள சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரைக் கொலை செய்யப்போவதாக ஊடக நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியதாக 16 வயது பள்ளி மாணவன் லக்னோவில் இருந்து நொய்டா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.