வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் மாநிலத் தலைவரும், பாலக்காடு எம்பியுமான விகே ஸ்ரீகண்டனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) வழக்குப் பதிவு செய்துள்ளது.
வந்தே பாரத் ரயில் மீது போஸ்டர்கள்:
கேரள மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு ஷோரனூர் நிலையத்தை வந்தடைந்தபோது இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வந்தே பாரத் ரயிலில் இருக்கும் கண்ணாடி பலகையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. ரயில்வே காவல் துறையினர் ஒட்டப்பட்ட பல சிவரொட்டிகளை உடனடியாக அகற்றியதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க -வை சேர்ந்த யுவ மோர்ச்சா அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் விடப்பட்ட முதல்நாளே காங்கிரஸ் எம்.பி யின் சுவரொட்டி ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமரின் கேரள சுற்றுப்பயணம்:
முன்னதாக, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி கேரளாவிற்கு வருகை தந்திருந்தார். அப்போது பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் கேராளாவின் முதல் வந்தே பாரத் ரயிலை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயில் திருவனந்தபுரம் செண்ட்ரல் ரயில் நிலையம் முதல் காசர்கோடு வரை செல்லும்.
இந்த ரயில் ஷோரனூர் ரயில் நிலையத்திற்கு வந்த போது காங்கிரஸ் எம்.பி விகே ஸ்ரீகண்டன் வரவேற்க அங்கு வருகை தந்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் கூறுகையில், அவரது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதற்கும் கட்சியனருக்கும் எந்த சம்மதமும் இல்லை. இது பாஜகவால் வேண்டுமென்றே திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட ஒரு நாடகம். தனக்கு எதிராக அவப்பெயர் உருவாக்கும் ஒரு செய்லாக இது நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
ஷோரனூர் ரயில்நிறுத்தம்:
முன்னதாக, வந்தே பாரத் ரயில் திறப்பு விழாவுக்கு முன்பு ஷோரனூரில் நிறுத்தம் அறிவிக்கப்படாவிட்டால், வந்தே பாரத் ரயிலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தரப்பில் சிவப்புக் கொடி காட்டப்படும் என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ரயில்வேயின் முடிவு சாதகமாக வரவில்லை என்றால் மாபெரும் போராட்டத்தை நடத்தவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருந்தது. இந்த எச்சரிக்கைகளை தொடர்ந்து வந்தே பாரத் ரயில் ஷோரனூரில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.