பிரதமர் மோடி இன்று 75 டிஜிட்டல் வங்கி கிளைகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் பிரச்சாரத்தில் டிஜிட்டல் வங்கி கிளைகள் மேலும் ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்றார்.


இதுகுறித்து விரிவாக பேசிய மோடி, "இது சிறப்பான வங்கி வசதியாகும். குறைந்தபட்ச டிஜிட்டல் உள்கட்டமைப்புகளை வைத்து கொண்டு அதிகபட்ச சேவைகள் வழங்கப்படும். அரசு ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களில் வேலை செய்தது. முதலாவதாக, வங்கி அமைப்பை மேம்படுத்துதல். அதை வலுப்படுத்துதல் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருதல். இரண்டாவதாக, நிதி அமைப்பை அனைவருக்குமானதாக ஆக்கினோம்.


 






2022-23 மத்திய பட்ஜெட்டின் ஒரு பகுதியாக, ஆங்கில ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி கிளைகள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.


டிஜிட்டல் வங்கி கிளைகளின் நோக்கம் என்ன?


டிஜிட்டல் வங்கியின் பலன்கள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைவதை உறுதி செய்வதற்காக டிஜிட்டல் வங்கி கிளைகள் அமைக்கப்படுகின்றன. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் டிஜிட்டல் வங்கி கிளைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எத்தனை வங்கிகள் டிஜிட்டல் வங்கி கிளைகளை அமைக்கின்றன?


11 பொதுத்துறை வங்கிகள், 12 தனியார் வங்கிகள் மற்றும் ஒரு சிறு நிதி வங்கி ஆகியவை இந்த முயற்சியில் பங்கேற்கின்றன.


டிஜிட்டல் வங்கி கிளைகளின் செயல்பாடுகள் என்னென்ன?


மக்களுக்கு சேமிப்புக் கணக்கு தொடங்குதல், இருப்புச் சரிபார்ப்பு, அச்சிடப்பட்ட பாஸ்புக், நிதி பரிமாற்றம், நிலையான வைப்புத்தொகைகளில் முதலீடு, கடன் விண்ணப்பங்கள், காசோலை ரத்து வழிமுறைகள் போன்ற பல்வேறு டிஜிட்டல் வங்கி வசதிகள் அதன் கிளைகளில் வழங்கப்படும். கிரெடிட் / டெபிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கவும், கணக்கு அறிக்கையை சரி பார்க்கவும், வரி செலுத்தவும், பில்களை செலுத்தவும் இந்த கிளைகள் பயன்படும்.


இந்த கிளையின் மூலம் செலவு குறைவான, அனைவரின் வசதிக்கேற்ப, வங்கி சேவையின் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் அனுபவம் ஆண்டு முழுவதும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் நிதி அமைப்பு தொடர்பான அறிவு, சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் வழிமுறைகளில் அதிக முக்கியத்துவம் தரப்படும்.