2022ம் ஆண்டுக்கான உலக பட்டினி குறியீட்டில் (GHI) இந்தியா 107 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளத்தை ஒப்பிடுகையில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. 121 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 107 வது இடத்தை பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 101ஆவது இடத்தை பிடித்திருந்தது. சீனா, துருக்கி மற்றும் குவைத் உள்பட பதினேழு நாடுகள் இந்த பட்டியலில் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டன என பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைக் கண்காணிக்கும் உலகளாவிய பட்டினி குறியீட்டின் இணையதளம் நேற்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான உலக பட்டினி குறியீட்டு அறிக்கை தவறான தகவல்களின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் சேகரித்த முறையில் தீவிரமான பிரச்னை இருப்பதாகவும் இந்தியா எதிர்வினையாற்றியுள்ளது.
பட்டினி குறியீடு பட்டியல் தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "இந்த அறிக்கை கள நிலவரத்திற்கு தொடர்பில்லாமல் உள்ளது. அது மட்டுமல்லாமல், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சிகளை வேண்டுமென்றே புறக்கணிக்கிறது.
குறிப்பாக, கொரோனா பெருந்தொற்றின்போது, குறியீட்டைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள நான்கு குறிகாட்டிகளில் மூன்று குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பானவை. எனவே, அது முழு மக்கள் தொகையை பிரதிநிதித்துவப்படுத்தும் அறிக்கையாக இருக்க முடியாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டினி குறியீட்டு அறிக்கைக்காக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் மாதிரி அளவைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ள அமைச்சகம், "நான்காவது குறிகாட்டி, மிக முக்கியமானது. ஊட்டச்சத்து குறைந்த மக்கள்தொகை தொடர்பான அந்த குறிகாட்டியானது 3,000 என்ற மிக குறைவான மாதிரி அளவு கொண்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது
இந்த அறிக்கை ஒரு பரிமாணப் பார்வையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உணவு மற்றும் வேளாண் அமைப்பிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. உத்தரவாதம் அளிக்கப்படும். எத்தகைய உண்மைப் பரிசீலனைகளைப் பொருட்படுத்தாமல், அறிக்கை வெளியிடப்பட்டது. வருந்தத்தக்கது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அயர்லாந்து தொண்டு நிறுவனமான கன்சர்ன் வேர்ல்டுவைடு, ஜெர்மன் அமைப்பான வெல்ட் ஹங்கர் ஹில்ஃப் ஆகியவை இணைந்து இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது. அறிக்கையில், இந்தியாவின் பட்டினி நிலை தீவிரமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில், 116 நாடுகளில் இந்தியா 101ஆவது இடத்தில் இருந்தது. இந்தாண்டு, 121 நாடுகள் கொண்ட பட்டியலில் 107 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் பட்டினி குறீயிட்டு மதிபெண்களும் குறைந்து வருகிறது. 2000ஆம் ஆண்டு, 38.8 ஆக இருந்த மதிப்பெண்கள் 2014 மற்றும் 2022 இடையேயான காலத்தில் 28.2 - 29.1 மதிப்பெண்களாக குறைந்தன.