ஒரு சமயத் துறவியாக இருந்த போதிலும், உலகின் அனைத்து மக்களாலும் போற்றப்படுபவராக, இறை நம்பிக்கை இல்லாத பலரையும் கூடத் தன் பக்கம் ஈர்க்கிறவராக சுவாமி விவேகானந்தர் விளங்குகிறார். காரணம் அவரது சம நோக்கு; சமுதாயப் பார்வை. அவரின் திருமுகத்தில் தெரியும் தீட்சண்யம், கரிய விழிகளில் காட்டும் கூர்மை, கட்டிய கரங்களில் வெளிப்படும் கம்பீரம், நின்ற தோற்றத்தில் நம்முள் கடத்தும் மன உறுதி.


மனித குலத்தில், வெகு அபூர்வமாக மிகச்சிலருக்கு மட்டுமே இந்த வசீகரம் வாய்க்கிறது. ஆண்டுதோறும் விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12-ஆம் தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு 1984-ல் முடிவுசெய்து அடுத்து வந்த ஆண்டான 1985-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ஐ தேசிய இளைஞர்களின் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தர் சிறுவயதிலேயே இந்துசமய கொள்கைகளில் அதீத ஈடுபாடும், பகுத்தறிவுப்பெற்ற சிந்தனைவாதியாகவும், தத்துவமும் புலமையும், சேவை மனப்பான்மைமிக்கவராகவும் காணப்பட்டார்.


இந்த நிலையில் அவரது பொன்மொழிகளை இக்கால இளைஞர்களுக்கு  கொண்டு செல்ல முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. ஏன் விவேகானந்தர் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாக அறிவிக்கப்பட்டது? விவேகானந்தர் இளைஞர்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். மேலும்  இளமையில்தான் நம்முடைய எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என்றும் அவர் திட்டவட்டமாக நம்பினார்.




மேலும் கல்வி இன்றியமையாதது என்பதை தொடர்ந்து பறைசாற்றிய விவேகானந்தர், பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். 1893-இல் சிகாகோவில் நடைபெற்ற உலகச் சமயங்களின் மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது.


கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுகள் அப்போது கீழ்நிலையில் அவதிப்பட்ட இந்தியர்களை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்தது. ”இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன். இளைஞர்களே தேச முன்னேற்றம் என்னும் தேர்ச்சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்” என முரசு கொட்டினார் விவேகானந்தர்.



சமயத் தலைவர்கள் அருளும் துறவற மொழிகளைப் போல இருந்ததில்லை விவேகானந்தரின் அனல் மொழிகள்.. நாளை ஜெயித்துவிடுவேன் என நம்பிக்கை கொண்ட எவருக்கும் அதுதான் டானிக்.


அந்த எனர்ஜி டானிக்கின் சில துளிகள் இவை..


1. இலக்கை அடையும்வரை நிற்காமல் செல்


2. மனதுக்கும் மூளைக்கும் முரணா, இதயத்தை பின்பற்று..


3. உண்மை வசதியானதாக இருக்காது


4. எந்த பிரச்சனைகளும் இல்லையென்றால், அந்த வழி சரியானதல்ல


5. உங்களுக்கு உண்மையாக இருக்கும்தன்மைதான் சிறந்த மதம்..


ஆமாம்... நமக்கு உண்மையாக இருக்கும்தன்மைதான், சிறந்த மதம்..