நாட்டிலே மிகப்பெரிய மாநிலமாகவும், அதிக மக்களவைத் தொகுதிகளை கொண்ட மாநிலமாகவும் திகழ்வது உத்தரபிரதேசம். உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்து வருகிறது. அந்த மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருவதாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் எலிகள் அதிகளவில் காணப்படும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மருத்துவமனைகளில் ஓடும் எலிகள்:
உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது ராம்பூர் மாவட்டம். ராம்பூர் மாவட்ட மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். முக்கிய மருத்துவமனையான இந்த மருத்துவமனையில் நோயாளிகள் புற நோயாளிகளாக மட்டுமின்றி, உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த மருத்துவமனையில் நோயாளிகள் படுக்கையின் மேல் உள்ள கம்பிகளில் எலிகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படுக்கையில் நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சைக்காக ஏற்கனவே வேதனையில் அனுமதியாகியுள்ள நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நோயாளிகள் அச்சம்:
இதேபோல, அலிகாரில் உள்ள மல்கன்சிங் அரசு மருத்துவமனையிலும் ஒரு துயரச்சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த மருத்துவமனையில் உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிவின்கீழ் உள்ள படுக்கைகளின் கீழே 10க்கும் மேற்பட்ட எலிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன. எலிகள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு படுக்கையின் மேலே குழந்தை ஒன்று படுத்துள்ளது. இந்த எலிகள் சில சமயம் நோயாளிகளையும், அவர்களை பராமரித்துக்கொள்பவர்களையும் கடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பலதரப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் பராமரிப்பு என்பது எந்தளவு முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே ஆகும்.
ஆனால், இவ்வளவு அலட்சியமாக எலிகள் நடமாடுவதை மருத்துவமனை நிர்வாகம் இதுவரை சரி செய்யாமல் இருப்பதால் மேலும் புதிய நோய்த் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் ஓடும் எலிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே, வட இந்தியாவில் சில மருத்துவமனைகளில் பச்சிளங்குழந்தைகளை எலிகள் கடித்த விவகாரம் சில ஆண்டுகளுக்கு முன்பு மக்களை மிகவும் வேதனைப்பட வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Rahul Gandhi : மணிப்பூர் முதல் மும்பை வரை; 6200 கிலோ மீட்டர் யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி