சமீப காலமாக, பொது சிவில் சட்டம் தொடர் பேசுபொருளாக மாறி வருகிறது. அதற்கு முக்கிய காரணம், பொது சிவில் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்த கருத்து. கடந்த மாதம், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவைப்படுகிறது. வெவ்வேறு சமூகங்களுக்கு தனி சட்டங்கள் என்ற இரட்டை அமைப்புடன் நாடு இயங்க முடியாது" என்றார்.
பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் மத்திய பாஜக அரசு:
இந்த பேச்சின் மூலம் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுத்து வருவது தெளிவாகிறது. இதற்கு, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சட்ட ஆணையத்தின் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் துரைமுருகனும் கடிதம் எழுதியிருந்தனர்.
இதற்கிடையே, பொது சிவில் சட்டம் தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்டு வந்த சட்ட ஆணையம், அதற்கான காலக்கெடுவை ஜூலை 28ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி முதல், அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் கருத்துகளை கேட்டு வந்தது.
பொது மக்களிடம் கருத்துகளை கேட்டு வந்த சட்ட ஆணையம்:
கருத்துகளை தெரிவிப்பதற்கான ஒரு மாத காலக்கெடு ஜூலை 14ஆம் தேதி, அதாவது நேற்று முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்ட ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள் பெருந்திரளாக கருத்துகளை தெரிவித்துள்ளதாலும், கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளதாலும், கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க சட்ட ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஆர்வமுள்ள எந்தவொரு தனிநபரும், நிறுவனமும் அல்லது அமைப்பும், ஆணையத்தின் இணையதளத்தில் ஜூலை 28 வரை பொது சிவில் சட்டம் பற்றிய கருத்துக்களை வழங்கலாம்" என குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், "பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும்
ஊறுவிளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டுமென்று இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ரிதுராஜ் அவஸ்திக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பன்முகச் சமூகக் கட்டமைப்பிற்குப் பெயர் பெற்ற இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்திட இக்கடிதத்தினை எழுதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது"