உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் ஆதிக்க சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ததற்காக பட்டியலின இளைஞர் ஒருவர் மனைவியின் உறவினர்களால் கொல்லப்பட்டார். இதை, காவல்துறை வெள்ளிக்கிழமை அன்று உறுதி செய்துள்ளனர்.
பனுவாதோகான் கிராமத்தைச் சேர்ந்தவர் தலித் ஆர்வலர் ஜெகதீஷ் சந்திரா. இவர், வெள்ளிக்கிழமை அன்று பிகியாசைன் நகரில் உள்ள கார் ஒன்றில் இறந்து கிடந்ததாக சால்ட் துணைப் பிரிவு தாசில்தார் நிஷா ராணி தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை விரிவாக விவரித்த அவர், "மனைவியின் தாயார், அவரது மாற்றாந்தந்தை மற்றும் அவரது வளர்ப்பு சகோதரர் உடலை அப்புறப்படுத்த காரில் எடுத்துச் சென்றபோது பிடிபட்டனர். அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இருவருக்கும் ஆகஸ்ட் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், சந்திராவை அவரது மனைவியின் உறவினர்கள் வியாழக்கிழமை கடத்திச் சென்றனர்" என்றார்.
இது தொடர்பாக பேசிய உத்தரகாண்ட் பரிவர்தன் கட்சியின் தலைவர் பாக் , "ஆகஸ்ட் 27 அன்று, தம்பதியினர் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, பாதுகாப்பு கோரி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினர். பாதிக்கப்பட்டவர் சால்ட் சட்டப்பேரவை தொகுதியில் இரண்டு முறை கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். தம்பதியின் புகாரின் பேரில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தால், சந்திராவை காப்பாற்றியிருக்கலாம்" என்றார்.
இந்த கொலை உத்தரகாண்ட் மாநிலத்திற்கே அவமானம் என்று கூறிய அவர், பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கு 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சாதிய ஆணவ படுகொலைகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு முற்றிப்புள்ளி வைத்தபாடில்லை. சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளையும் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த வந்த போதிலும், காவல்துறை மெத்தனமான நடந்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கென தனி சட்டம் இயற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில், இளவரசன், கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்குகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. முற்போக்கு மாநிலம் எனக் கூறப்படும் தமிழ்நாட்டிலேயே இதுபோன்ற கொலைகள் நடைபெறுவது பிரச்சினையின் தீவிரத்தன்மை நமக்கு உணர்த்துகிறது.