குஜராத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், தனது பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். அதை தடுத்த நிறுத்த சிறுமி போராடிய நிலையில், அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். 


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தாண்டு கொல்கத்தா மருத்துவர் சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.


குஜராத்தில் பகீர் சம்பவம்:


இந்த நிலையில், குஜராத்தில் மனதை பதற வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாஹோத் மாவட்டத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளார். தனது பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.


அதை தடுத்த நிறுத்த சிறுமி போராடிய நிலையில், அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். சிங்வாட் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளி வளாகத்தில் குழந்தையின் உடல் கடந்த வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.


இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ராஜ்தீப்ஷின் ஜலா கூறுகையில், "பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்த் நாட், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததைத் தடுத்ததால், சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.


தலைமை ஆசிரியர் வெறிச் செயல்:


வியாழக்கிழமை காலை 10.20 மணியளவில், தனது காரில் அவ்வழியாகச் சென்ற தலைமை ஆசிரியர், தாயின் வேண்டுகோளுக்கு இணங்க, வாகனத்தில் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டார். ஆனால், அன்று சிறுமி பள்ளிக்கு செல்லவில்லை என மாணவர்களும் ஆசிரியர்களும் போலீசாரிடம் தெரிவித்தனர்.


​​​​சிறுமியை தனது காரில் அழைத்துச் சென்று பள்ளியில் இறக்கிவிட்டதாகவே தலைமையாசிரியர் விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார். பின்னர், சிறுமியைக் கொன்றதை போலீஸாரிடம் ஒப்புக்கொண்டார்.


பள்ளிக்கு செல்லும் வழியில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அவர் எதிர்ப்பு தெரிவித்தபோது, ​​அவர் அலறுவதைத் தடுக்க சிறுமியின் வாயையும் மூக்கையும் மூடினார். இதனால் அவர் மயக்கமடைந்தார்.


பின்னர், பள்ளிக்கு சென்று சிறுமியின் உடலை உள்ளே வைத்து தனது காரை நிறுத்தினார். மாலை 5 மணியளவில் உடலை வெளியே எடுத்து பள்ளி கட்டிடத்தின் பின்புறத்தில் புதைத்தார். பின்னர், சிறுமியின் பள்ளி பை மற்றும் செருப்புகளை வகுப்பறையில் வைத்துவிட்டார்" என்றார்.