இந்தியாவில் மிகப்பெரிய செய்திகள் வரும் தலமான டெய்லிஹண்ட். இதில் பல்வேறு செய்தி நிறுவனங்களில் செய்திகள் வாசிக்க கிடைக்கும். இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளில் செய்திகள் டெய்லிஹண்ட் செயலி மற்றும் தளத்தில் வரும். டெய்லிஹண்ட் மற்றும் அதானி மீடியா குழுமம் இணைந்து இந்தியாவின் அடுத்த பெரிய கதை சொல்லும் நபர்களுக்கான தேடல் நிகழ்ச்சி ஒன்றை அறிவித்திருந்தது. ‘ஸ்டோரி ஃபார் க்ளோரி’ என்ற இந்த நிகழ்ச்சியை இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. அச்சு மற்றும் வீடியோ என்று பிரிவுகளாக இந்தப் போட்டி பிரிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் முதல் வரவேற்கப்பட்டன. இதில் சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களிலிருந்து சுமார் 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் 8 வாரங்கள் ஃபெல்லோஷிப் பயிற்சியில் ஈடுபட்டனர். அத்துடன் 2 வாரம் எம்.ஐ.சிஏ மீடியா அகாடமியில் பயிற்சி வகுப்புகள் எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து 6 வாரங்கள் கொண்ட இறுதி ப்ரோஜெக்ட் ஒன்றை இவர்கள் தயார் செய்தனர். அதற்கு சில ஊடகத்தைச் சேர்ந்த நபர்கள் ஆலோசகர்களாக இருந்தனர். இந்த 20 பேரும் டெல்லியில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் தங்களுடைய ப்ரோஜெக்ட்டை திரையிட்டனர். அந்த ப்ரோஜெக்ட்களை பார்த்த நடுவர்கள் அதிலிருந்து கடைசியாக 12 பேரை தேர்ந்தெடுத்தனர். இந்த இறுதிச் சுற்றுக்கு நடுவர்களாக டெய்லிஹண்ட் நிறுவனர் வீரேந்திர குப்தா, அதானி மீடியா குழுமத்தின் சிஇஒ சஞ்சய் புகாலியா, த இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாக இயக்குநர் அமந்த் கோயன்கா, ஃபேக்டர் டெய்லி நிறுவனர் பங்கஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் இருந்தனர்.
இந்த தேடல் நிகழ்ச்சி தொடர்பாக டெய்லிஹண்ட் நிறுவனர் வீரேந்திர குப்தா, “தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த கதை சொல்லும் நபர்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். தற்போது உள்ள அச்சு மற்றும் இணைய ஊடகங்களில் கதை செல்வதற்கு திறமையான நபர்களின் தேவை உள்ளது. அதற்கு இந்த ‘ஸ்டோரி ஃபார் க்ளோரி’ என்ற தேடல் நிகழ்ச்சி நிச்சயம் வழிவகை செய்யும். கதை எழுதக் கூடிய ஆர்வம் நிறைந்த திறமைசாளிகளை அடையாளம் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான தளத்தை நாங்கள் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக உருவாக்கி கொடுத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இது தொடர்பாக அதானி ஏ.எம்.ஜி மீடியா குழுமத்தின் சிஇஒ சஞ்சய் புகாலியா, “பன்முக கலாச்சாரம் கொண்ட இந்தியாவில் பல்வேறு நபர்கள் திறமையாக கதை சொல்வதில் திறமை மிக்கவர்களாக உள்ளனர். டெய்லிஹண்ட் உடன் இணைந்து இந்த திறமைசாலிகளை கண்டறிய ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம். இந்த தேடல் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு எங்களை வியப்பில் ஆழ்த்தியது. ‘ஸ்டோரி ஃபார் க்ளோரி’ என்ற தேடல் நிகழ்ச்சி நல்ல ஸ்டோரி கண்டெண்ட் உருவாக்க உதவி தரும் வகையில் அமைந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் பயன் அடைந்துள்ளனர்” எனக் கூறியிருந்தார்.
மேலும் படிக்க: முதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா அசோக் கெலாட்..? அமைச்சர்கள் சொல்வது என்ன..?