உத்தர பிரதேசம் கான்பூர் மாநகராட்சி பகுதியில் ராட்வெய்லர் மற்றும் பிட்புல் வகை நாய்களை வளர்க்க பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளது. 


கான்பூர்: பிட்புல் மற்றும் ராட்வெய்லர் இன நாய்களை கான்பூரில் வளர்க்க தடை விதித்து கான்பூர் மாநகராட்சி கமிஷன் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த வகை இன நாய்களை யாரேனும் வளர்ப்பது கண்டறியப்பட்டால் அவர்களிடமிருந்து ரூ. 5000 வரை விதிக்கப்படும் என்றும், வளர்க்கும் செல்ல பிராணிகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அந்த தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக முறையான உத்தரவை பிறப்பிக்க நகராட்சி கமிஷனருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 


இதுகுறித்து, கான்பூர் மாநகராட்சி தாக்கல் செய்த தீர்மானத்தில், கவர்ச்சி மற்றும் பயங்கரமான இந்த வகை நாய்கள் வளர்க்க பொதுமக்களுக்கு போதுமான இடங்கள் இல்லை. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகி அந்த வகை இன நாய்கள் மக்களை தாக்குகின்றனர். 






இதனால், தாக்குதலில் இருந்து  பொதுமக்களை பாதுகாக்க, பயமுறுத்தும் பிட்புல் மற்றும் ராட்வெய்லர் இனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து நகராட்சி கூடுதல் கமிஷனர் ர்யகாந்த் திரிபாதி கூறுகையில், "இரண்டு வகை நாய்களை வளர்ப்பதற்கும், வியாபாரம் செய்வதற்கும், நகர்ப்புறங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி எல்லையில், சட்டவிரோதமாக நாய்களை வளர்த்தால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். நாய் பறிமுதல் செய்யப்படும்.இதற்கான முன்மொழிவு பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கான்பூர் மாநகராட்சி கமிஷன் வளாகத்தில் செயல்படுத்துவதற்கான முறையான உத்தரவை வழங்க, நகராட்சி கமிஷனருக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. " என்று தெரிவித்தார். 










இதற்கிடையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் பிட்புல் இன நாயின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கான்பூரின் சர்சய்யா காட் பகுதியில் பிட்புல் (pit bull) நாய் ஒன்று மாட்டை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதேபோல், காசியாபாத்தைச் சேர்ந்த சிறுவனின் முகத்தை நாய் கொடூரமாக கடித்துக் குதறிய நிலையில் முன்னதாக அவரது உடலில் 150 தையல்கள் போடப்பட்டது. 


கடந்த ஜூலை மாதம் உத்திரப்பிரதேசத் தலைநகர் லக்னவ்வின் கைசர்பாக் பகுதியில் 88 வயதான ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை சுசீலா திரிபாதி செவ்வாய்க்கிழமை காலை தனது வீட்டின் கூரையில் வாக்கிங்கில் இருந்தபோது அவரது செல்லப்பிராணி பிட் புல் அவரைத் தாக்கியதில் உயிரிழந்தார். 


அடுத்தடுத்து இந்த கொடூரமான தாக்குதலால் உத்தரப் பிரதேசத்தில் பிட்புல் இன நாய்களை வளர்ப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் தடைவிதிக்க பீட்டா அமைப்பு மீண்டும் அழுத்தமாக கோரிக்கை விடுத்து வருகிறது.