மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படியை அரசு உயர்த்துவது வழக்கம். அந்தவகையில் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒருமுறையும். அடுத்து ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒரு முறையும் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். இதற்கான அறிவிப்புகள் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளியாகும். 

இந்நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது உள்ள 34% அகவிலைப்படி இனிமேல் 38% சதவிகிதமாக இருக்கும். 

 

இந்தப் புதிய அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு ஊழியர்களுக்கு செலுத்தப்பட உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு கூடுதலாக ஆண்டிற்கு 6,591.36 கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அகவிலைப்படி உயர்வு மத்திய அரசின் ஓய்வூதியத்தை பெற்று வரும் நபர்களுக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் இதை தருவதால் மத்திய அரசுக்கு கூடுதலாக ஆண்டிற்கு 6,261.20 கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அகவிலைப்படி எப்படி கணக்கிடப்படும்?

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டிற்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அவர்களுக்கு தற்போது 7வது ஊதிய ஆணையத்தின் பரிந்துரைப்படி உள்ள குறியீடுகள் வைத்து அகவிலைப்படி கணக்கிடப்படும். இந்த அகவிலைப்படியை கணக்கிட நாட்டில் நிலவும் பணவீக்கம் உள்ளிட்ட காரனிகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

புதிய அகவிலைப்படி ஊதியம் எவ்வளவு உயரும்?

தற்போது மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி அகவிலைப்படி ஊதியத்திலிருந்து 38%-மாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி யார் யாருக்கு எவ்வளவு உயரும் தெரியுமா?

மாத சம்பளம் கூடுதல் அகவிலைப்படி
ரூபாய் 18000 ரூபாய் 720
ரூபாய் 25000 ரூபாய் 1000
ரூபாய் 50000 ரூபாய் 2000
ரூபாய் 1,00,000 ரூபாய் 4000

மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசின் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 31 சதவிகிதத்திலிருந்து 34 சதவிகிதமாக உயர்த்தி இருந்தது. அது தற்போது கூடுதலாக 4% உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு இந்த உயர்வின் மூலம் சுமார் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று கருதப்படுகிறது.