தொழிலதிபரும், முன்னாள் டாடா சன்ஸ் தலைவருமான சைரஸ் மிஸ்திரி, பால்கரில் சாலை விபத்தில் இறந்த பிறகு, விபத்து நடந்த நேரத்தில் ஏன் ஏர்பேக்குகள் திறக்கப்படவில்லை என்று கார் தயாரிப்பு நிறுவனத்திடம் போலீசார் கேட்டுள்ளனர்.
இந்த விபத்திற்குப் பிறகு, பால்கர் போலீசார் கார் தயாரிப்பு நிறுவனத்திடம், "ஏன் ஏர்பேக்குகள் திறக்கவில்லை? வாகனத்தில் ஏதேனும் இயந்திரக் கோளாறு இருந்ததா? காரின் பிரேக்கிற்கு பயன்படுத்தப்பட்ட திரவம் என்ன? டயரில் காற்றின் அழுத்தம் என்ன?" என்று பல கேள்விகளைக் கேட்டனர். மேலும், உரிய சோதனைக்கு பிறகே இந்த வாகனங்கள் ஆலையில் இருந்து வெளியே வருகின்றன. "அப்படிப்பட்ட சூழ்நிலையில், தயாரிப்பாளர் விசாரணையில் மோதல் பாதிப்பு பற்றிய அறிக்கை என்ன? மோதலுக்குப் பிறகு ஸ்டீயரிங் லாக்காகிவிட்டதா?" என பல்வேறு கார் உற்பத்தியாளரிடம் போலீசார் கேட்டனர். இந்த அனைத்து கேள்விகளுக்கும் கார் உற்பத்தியாளர் குழு தனது அறிக்கையில் பதில்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆதாரங்களின்படி, வாகனத்தின் டேட்டா ரெக்கார்டர் சிப் டிகோடிங்கிற்காக ஜெர்மனிக்கு அனுப்பப்படும் என்றும், ஜெர்மனியில் இருந்து டிகோடிங் செய்த பிறகு, கார் பற்றிய விரிவான தகவல்கள் காவல்துறைக்கு கிடைக்கும் என்றும் கார் உற்பத்தி நிறுவனம் பால்கர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளது. இந்த டேட்டா சிப் டிகோடிங்கிற்காக பல நாட்கள் ஆகலாம். இந்த டேட்டா ரெக்கார்டரில், வாகனம் குறித்த விரிவான தகவல்கள் கிடைக்கும். பிரேக், ஏர் பேக் மற்றும் வாகனத்தின் பிற இயந்திரங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பது போன்ற தகவல்கள் இருக்கும். விபத்தின் போது காரின் வேகமும் தெரியவரும். மேலும், வாகனத்தின் வேகம் பற்றிய மதிப்பீடுகள் வெவ்வேறு வீடியோ காட்சிகள் அல்லது நேரக் கணக்கீடுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. வாகனத்தின் சராசரி வேகம் அறியப்படும் ஆனால் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு இடங்களில் வாகனத்தின் வேகத்தை மதிப்பிட முடியாது. எனவே, விபத்து நடந்தபோது வாகனத்தின் வேகம் என்னவாக இருந்தாலும், டேட்டா ரெக்கார்டரில் இருந்து விரிவான தகவல்களைப் பெற்ற பின்னரே சரியான தகவல் தெரியவரும் என்று போலீஸ் வட்டாரங்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
சைரஸ் மிஸ்திரி மற்றும் பலர் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:25 மணிக்கு உத்வாடாவிலிருந்து புறப்பட்டதாகவும், பிற்பகல் 2:28 மணியளவில் விபத்து நடந்ததாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே சுமார் 60 முதல் 65 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி 2 நிமிடங்களில் கடந்துள்ளனர். இந்த பயணத்தின் போது அவர்கள் எங்காவது நின்றார்களா அல்லது நடுவே அதிவேகத்தில் சென்றனரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பால்கர் காவல்துறையின் அறிக்கையின்படி, மிஸ்திரி அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்தபோது, அவரது கார் டிவைடரில் மோதியுள்ளது. காரில் நான்கு பேர் இருந்தனர். மிஸ்திரியுடன் இறந்த மற்றொருவர் ஜஹாங்கீர் தின்ஷா பண்டோல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த அனயாதா பந்தோல் மற்றும் டேரியஸ் பண்டோல் ஆகியோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அதிவேகமாக வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது போல் தெரிகிறது. அதைத் தொடர்ந்து விபத்து நிகழ்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைரஸ் மிஸ்திரியின் சடலம் காசாவில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ளது. விபத்து மரண அறிக்கையை (ADR) போலீசார் தாக்கல் செய்து வருகின்றனர்," என பால்கர் போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.