மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் இரவு உணவிற்கு பிரியாணி செய்யாததால் குடிபோதையில் ஒருவர் மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். ஆகஸ்ட் 31 அன்று நான்டெட் சாலை பகுதியில் உள்ள குஷ்டடம் என்ற இடத்தில் நடந்த இந்த சம்பவத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட விக்ரம் விநாயக் டெடே மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.


சம்பவத்தை விவரித்துள்ள காவல்துறை ஆய்வாளர் சுதாகர் போகர், "ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு, குடிபோதையில் வீட்டிற்கு சென்ற குற்றவாளி, இரவு உணவிற்கு பிரியாணி செய்யாததற்காக மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மற்ற குடும்ப உறுப்பினர்கள் தலையிட முயன்றபோதும் குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியை அடித்துள்ளார். பின்னர், கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார்.


தாக்குதலில் பலத்த காயம் அடைந்த மனைவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை" என்றார்.


கடந்தாண்டு, டெல்லியில் சராசரியாக தினமும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நாட்டின் பாதுகாப்பற்ற பெருநகரமாக டெல்லி திகழ்வதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 13,892 வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன. இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 40% அதிகமாகும். அந்த ஆண்டு, 9,782 வழக்குகள் பதிவாகியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் 19 பெருநகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் 32.20 சதவீதம் ஆகும். 


டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.


கடந்த 2021ஆம் ஆண்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், கடத்தல் (3948), கணவர்களால் கொடுமைப்படுத்துதல் (4674) மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை (833) ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி அதிக எண்ணிக்கையில் உள்ளது. 


டெல்லியில் 2021 ஆம் ஆண்டில் சராசரியாக தினமும் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டில், டெல்லியில் பெண்களுக்கு எதிராக 13,982 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 19 பெருநகரங்களில் உள்ள மொத்த குற்றங்களின் எண்ணிக்கை 43,414 ஆகும்.