வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு போதைப் பொருள் கடத்தல் சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு இரண்டு ஆப்கானிஸ்தான் பிரஜைகளை கைது செய்துள்ளது. 1200 கோடி ரூபாய் மதிப்புள்ள 312.5 கிலோ மெத்தாம்பேட்டமைன் மற்றும் 10 கிலோ தூய்மையான ஹெராயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.






குற்றம் சாட்டப்பட்டவர்கள், டெல்லியில் உள்ள கலிந்தி குஞ்ச் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மீத்தாபூர் சாலையில் கைது செய்யப்பட்டனர். வெளிநாடுகளில் இருந்து கொண்டு, இயங்கி வரும் அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரின் பெரும் சரக்கு டெல்லிக்கு கடத்தப்படுவதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் முஸ்தபா ஸ்டானிக்சா (வயது 23) மற்றும் ரஹிமுல்லா ரஹீம் (வயது 44) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.


2016ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இவர்கள் வசித்து வருகின்றனர். டெல்லி சிறப்பு பிரிவின் காவல் ஆணையர் ஹர்கோபிந்தர் சிங் தலிவால் இதுகுறித்து கூறுகையில், "துணை காவல் ஆணையர் லலித் மோகன் நேகி மற்றும் ஹிருதய பூஷன் தலைமையிலான குழு, ஆய்வாளர்கள் வினோத் குமார் படோலா மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய குழு மற்றும் எஸ்ஐக்கள் சுந்தர் கெளதம் மற்றும் யஷ்பால் சிங் ஆகியோரின் உதவியுடன், டிசிபி/சிறப்புப் பிரிவு (என்டிஆர்) ஸ்ரீ பி எஸ் குஷ்வாவின் தீவிர மேற்பார்வையில், இரண்டு ஆப்கானிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டதன் மூலம் நாடு கடந்த போதைப்பொருள் கடத்தலை முறியடித்துள்ளோம். 


கைது செய்யப்பட்டதன் மூலம், 10 கிலோ ஆப்கானிஸ்தான் பூர்வீக ஹெராயின் தவிர, 312.5 கிலோகிராம் உயர்தர பார்ட்டி போதைப்பொருளான மெத்தாம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான EU4 கண்காணிப்பு போதைப் பொருள் திட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள், அந்நாட்டின் மத்திய மகைப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ephedra தாவிரங்கள் வேகமாக வளர்ந்து வருவதை உணர்ந்து வருகின்றனர். இந்த தாவிரத்திலிருந்துதான் மெத்தம்பேட்டமைன் உற்பத்தி செய்யப்படுகிறது.


கடந்த சில ஆண்டுகளாக, புலனாய்வு அமைப்புகளிலிருந்து குழுவுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஹெராயினுக்கு மாற்றாக மெத்தாம்பேட்டமைன் விற்பனையின் மூலம் பயங்கரவாத செயல்களுக்கு நிதி அளிக்கப்பட்டு வருகிறது.


முதற்கட்ட விசாரணையின்படி, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் இந்த போதைப் பொருள் கடத்தல் குழு தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.